எந்த தகவலும் கிடைக்காமல் தேடப்பட்ட 8 பேரில் மூவர் பத்திரமாக உள்ளனர்.. தொடர்புகொள்ள முடியாத 5 பேர்..!
சென்னை: கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறி பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டிருந்த நிலையில், அவர்களில் 3 பேர் பத்திரமாக உள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 5 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கோர ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒடிசாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ, அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒடிசா சென்று, அங்கு ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழர்களில் 8 பேர் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை என அதிகாரிகள் அறிவித்தனர். கோரமண்டல் ரயில் பயணித்த நரகாணி கோபி (34), கார்த்திக் (19), ரகுநாத் (21), மீனா (66), ஜெகதீசன் (47) கமல் (26), கல்பனா (19), அருண் (21) ஆகிய 7 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை. முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த அவர்கள் 8 பேரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவர்களில் மூவர் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன. 8 பேர் தேடப்பட்டுவந்த நிலையில் அவர்களில் 3 பேர் பத்திரமாக உள்ளது தெரியவந்தது. கோவையைச் சேர்ந்த கோபி, சென்னையைச் சேர்ந்த ஜெகதீசன் பாதுகாப்பாக ஊர் திரும்பி உள்ளனர். கமல் என்பவர் ரயிலில் பயணம் செய்யவில்லை என்பது சக பயணிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
8 பேரில் மூன்று பேரின் நிலை அறியப்பட்டுள்ள நிலையில், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. கார்த்திக், ரகுநாத், மீனா, கல்பனா, அருண் ஆகிய 5 பேரின் நிலை குறித்து இன்னும் எந்தவித தகவலும் தெரியவரவில்லை.
இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். 8012805050, 044-28593990, 9445868943 ஆகிய எண்களுக்கு அவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications