திருமாவின் இரட்டை வேடம் தெரியுமா? நடந்ததைச் சொல்லட்டுமா? அதியமான் ஆவேசம்
சென்னை: திருமாவளவன் அருந்ததிய மக்கள் பிரச்சினைக்கு ஆதரவாக ஒரு போராட்டமாவது நடத்தி இருக்கிறாரா? அல்லது உள் ஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்காவது ஆதரவு அளித்திருக்கிறாரா? என்று ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
திருமாவளவன் ஒட்டுமொத்த தலித் மக்களுக்கான தலைவர் இல்லை என்றும் ஆகவே அவர் முதல்வராக முடியாது என்றும் மத்திய இணையமைச்சர் ஒரு கருத்தை சில நாட்கள் முன்னதாக முன்வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்த திருமாவளவன், 'முருகன் அருந்ததியர் அல்ல. ஆர்.எஸ்.எஸ்காரர்' என்று வாதத்தை வேறு பக்கம் திசை திருப்பினார். அதற்கு எல்.முருகன், 'ஆர்.எஸ்.எஸ்காரன் என்பதற்குப் பெருமை கொள்கிறேன்' என்று பேசி இருந்தார். இந்தச் சர்ச்சை தொடக்கப் புள்ளியே அருந்ததியர் Vs தலித் என்ற இருதுருவ மோதல்தான்.

பல வருடங்களாகவே அருந்ததியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டங்களில் விசிக கவனம் செலுத்தியதில்லை என்று ஒரு குற்றச்சாட்டுப் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்தக்கட்சி பறையர் வகுப்பினரை மட்டுமே கவனத்தில் கொள்கிறது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்கான சான்று, விசிக அருந்ததியச் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 3% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதிசெய்த பிறகு, அதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தபோது வெளிப்பட்டது.
இந்நிலையில்தான் அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன், 'திருமாவளவனின் முதல்வர் கனவு நிறைவேறாது' என்று கூறியிருந்தார். இதன் மூலம் இத்தனை ஆண்டுகள் நீருக்குள் நெருப்பாகப் புகைந்துகொண்டிருந்த அருந்ததியர் Vs தலித் விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தொடக்கக் காலத்திலிருந்தே உள் ஒதுக்கீட்டில் திருமாவளவன் இரட்டை வேடம் போட்டு வருவதாக ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் , "எல்.முருகனை அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனால் பாஜக அரசு மத்திய அமைச்சராக்கவில்லை. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர். ஆகவே அந்த வாய்ப்பை அளித்தார்கள். நாங்கள் கட்சி பெயரில் அருந்ததியர் என்பதை வைத்துள்ளோம். ஆனால், சாதி ஒழிப்பு என்பதுதான் எங்கள் கொள்கை. முருகன் சாதி ஒழிப்பு பற்றிப் பேசுவாரா? அருந்ததியர் மக்களின் பிரதிநிதி முருகன் இல்லை. அவர் அடிமட்ட பிரச்சினையைக் கையில் எடுத்துப் போராடியதும் இல்லை.
இரண்டு முறை தேர்தலில் நின்று தோற்றுப்போனவர் அவர். முருகனை மக்கள் நிராகரித்துவிட்டனர். அவரைப் பற்றிப் பேசுவதே வீண் விவாதம். தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரனாக இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்கிறார் முருகன். அவர் பாஜக என்றால்கூட பரவாயில்லை. ஆர்.எஸ்.எஸ் என்கிறார். அதை இன்னும் ஆபத்தாகவே பார்க்கிறோம். ஒரு சமூகத்தில் அவர் பிறந்துவிட்டார் என்பதாலேயே அவர் அச்சமூகத்தின் பிரதிநிதியாகிவிட முடியாது. அவர் அமைச்சராக அவருக்குச் சாதி உதவியிருக்கிறது. அவர் எஸ்.சி., எஸ்டி வாரியத்திற்கு சேர்மேன் ஆக இருந்தார். அப்போதுகூட அருந்ததிய மக்களுக்கு எதையும் செய்துவிடவில்லை.
திருமாவளவன் விவகாரத்திற்கும் வருகிறேன். அவர் சமூகநீதி பற்றி பேசிய நூற்றுக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. அப்படி பேசிய அவர் அருந்ததியருக்கு வழங்கப்பட்ட 3% உள் ஒதுக்கீட்டைச் செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பிறகு அதை நிறுத்தி வைக்கவேண்டும் எனச் சீராய்வு மனுத் தாக்கல் செய்கிறார். கடந்த 2008 முதல் இப்போது வரை உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் என்று பேசிவந்த திருமா திடீரென்று நீதிமன்றம் போய் தடை கேட்கிறார். மேடையில் ஒரு பேச்சும் செயலில் வேறு மாதிரியும் நடந்து கொள்கிறார்.
அவர் உண்மையில் உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பவராக இருந்தால், அதற்காக அமைக்கப்பட்ட ஜனார்த்தனர் ஆணையம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியபோது, அதை ஆதரித்து திருமா கடிதம் அளித்திருக்கவேண்டும். கொடுத்தாரா? கொடுக்கவில்லையே? நாங்கள் அருந்ததியர் உள் ஒதுக்கீடு கேட்டு 30 ஆண்டுகளாகப் போராடி வந்தோம். திருமா கட்சி தொடங்கி 40 வருடங்களாகிவிட்டது. ஒருமுறையாவது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்காக நடந்த போராட்டத்தில் அவரோ அல்லது விசிகவோ கலந்துகொண்டது உண்டா? இது ஒருவகையான பார்ப்பனீயம்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டபோது என்ன சொன்னார்? உள் ஒதுக்கீடு கொடுத்தால் தலித் மக்களைப் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று சொன்னார். இதேபோல் ஆந்திராவில் உள் ஒதுக்கீடு வழங்கிய போது உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அதை அனுமதிக்கவில்லை என்றும் சொன்னார். ஒருவேளை இந்த உள் ஒதுக்கீட்டை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் நான் தான் முதல் கையெழுத்துப் போடுவேன் என்றார்.

இன்றைக்கு அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார். ஆக, வாய் ஜாலம் செய்கிறார் திருமா. இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, சிந்தனைச்செல்வன் ஒரு அறிக்கைவிடுகிறார். மொழிரீதியாக அருந்ததியரைப் பிரித்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்கிறார். 30 வருடங்களில் அருந்ததிய மக்கள் மீது எத்தனை தாக்குதல் நடந்தது? திருமா என்ன சொன்னார்? அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு தரலாம். ஆனால் பட்டியலின பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள 18% ஒதுக்கீட்டிலிருந்து தராமல், வேறு பட்டியலிலிருந்து தரவேண்டும் என்றார்.
நாங்கள் தலித் மக்களைவிடக் கீழான நிலையில் உள்ளவர்கள் என்கின்றனர். சமூகநீதி பேசும் இவர்கள் எங்கள் வகுப்பினர் முன்னேற ஆதரவு அளித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? நாங்கள் பட்டியலின மக்கள் அட்டவணைப் பிரிவில்தான் இருக்கிறோம். அதிலிருந்துதான் உள் ஒதுக்கீடு வாங்க முடியும்? பொதுப் பட்டியலிலிருந்து எடுத்தால் அந்தப் பிரிவினர் விடுவார்களா? தலித் பட்டியலில் உள்ள திருமாவே எதிர்க்கும்போது பொதுச் சமூகம் விட்டுக் கொடுக்குமா? இது என்ன நியாயம்? என்ன நீதி?
நாடு விடுதலை பெற்றது முதல் 2009வரை சுமார் 45 ஆண்டுகளாகப் பறையர், பள்ளர் ஆகிய இரண்டு பட்டியலின சாதியினர்தான் ஒட்டுமொத்தமான இடஒதுக்கீட்டை அனுபவித்து வந்தார்கள். அதுதான் வரலாறு. அருந்ததியர் சமூகத்தில் ஒரு துணைவேந்தர் இல்லை. ஒரு பதிவாளர் இல்லை. ஒரு செனட் உறுப்பினர் கூட இல்லை. ஒரு சிண்டிகேட் உறுப்பினர் இருக்கிறார்களா? பட்டியலினத்திற்கான 18சதவீதத்தில் 3% தான் அருந்ததியருக்கு உள்ளது. மீதம் உள்ள 15% பள்ளர், பறையர் அனுபவிக்கிறார்கள். அதை உடைத்துத்தான் உச்சநீதிமன்றம் உள் ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது" என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications