வரப்பிரசாதம்.. மத்திய அரசின் "மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்".. பெண்களுக்கான ஸ்பெஷல் திட்டம்: அருமை
சென்னை: மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதனால் பெண்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மத்திய அரசானது, நம்முடைய பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.. அதில் ஒன்றுதான், "பெண்கள் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்".

மத்திய அரசு: மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் என்பது பெண்களுக்காகவே, பிரத்யேகமாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான், இந்த "மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" (Mahila Samman Savings Certificate) திட்டமாகும்..
பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம்.. வயது வரம்பு எதுவும் கிடையாது. 18 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண் குழந்தைகள் தங்களின் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம்.
2025 மார்ச் 31-ம் தேதிக்கு முன், பெண்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். படிவம் 1-ஐ நிரப்பித்தந்து முதலீடு செய்யலாம். சிறப்பு வாய்ந்த இந்த சிறுசேமிப்பு திட்டத்தை, நடந்து முடிந்த மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
சேமிப்பு திட்டம்: "மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" (Mahila Samman Savings Certificate) என்று சொல்லப்படுகிற இந்த திட்டத்தில், பெண்கள் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம்வரை சேமிக்க முடியும்... வருடத்துக்கு 7.5% வட்டி தரப்படுகிறது. இந்த திட்டம் 2025 மார்ச் 31 வரையிலான இரண்டு வருட காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.
எங்கு துவங்கலாம்: நாட்டிலுள்ள 1.59 லட்சம் தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் முக்கிய கிளைகள் மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டிலுள்ள 1.59 லட்சம் அஞ்சல் நிலையங்களிலும், இந்த மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எப்படி துவங்குவது: ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி, அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டை 100-ன் மடங்குகளில் தான் செய்யமுடியும். டெபாசிட்டை துவங்க ஆதார், பான் ஆவணங்கள் முக்கியம்.. இவை இரண்டுமே இணைக்கப்பட்டிருப்பதும் அவசியம்.
3 மாதத்துக்கு ஒருமுறை வட்டி, கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் டெபாசிட் தொகை, முதலீடு செய்த தேதியிலிருந்து 2 வருடங்கள் கழித்து முதிர்வடையும். படிவம் 2-ஐ நிரப்பிக் கொடுத்து அதைப் பெற்றுக் கொள்ளலாம். டெபாசிட்டை ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்த பிறகு, கணக்கிலிருக்கும் தொகையில் அதிகபட்சமாக 40 சதவிகித தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
டெபாசிட் போட்டவர் 2 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டால், அப்போது முழுத்தொகையும் வழங்கப்பட்டு விடும். அதேபோல, டெபாசிட் போட்டிருப்பவருக்கு உயிருக்கு ஆபத்தாகக்கூடிய நோய்கள் ஏற்பட்டால் மருத்துவ உதவிக்கு இந்த டெபாசிட் பணத்தை எடுத்து கொள்ளலாம்.. பிள்ளைகளுக்காக முதலீடு செய்து வரும் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டாலும், பாதியிலேயே முழுப்பணமும் தரப்பட்டுவிடும்.
வருமானவரி: ஆனால், இந்த 2 காரணங்கள் தவிர, டெபாசிட் ஆரம்பித்து 6 மாதங்களுக்குப் பிறகு கணக்கை முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அப்போது 2 சதவிகித அபராத வட்டி கழிக்கப்பட்டு, அது வரைக்குமான காலத்துக்கு 5.5% வட்டி வழங்கப்படும்.
இது மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு 100% உத்தரவாதம் இருக்கிறது. இந்த டெபாசிட்டில் செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை எதுவும் கிடையாது. அதேபோல், வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை கிடையாது.. ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.












Click it and Unblock the Notifications