2 ஆண்டுகளில் நெஞ்சை நெகிழச் செய்த சம்பவங்கள்! - தேடிச் சென்று உதவிய ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சராகப் பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த இரண்டு ஆண்டுகளில் நெஞ்சை நெகிழச் செய்யும் சில நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. அதற்குப் பின்னால் ஒரு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்திருக்கிறார்.
ஆம்! சில சாமானிய மக்களின் கண்ணீர்க் குரலையும் இந்த ஆட்சி காது கொடுத்துக் கேட்டிருக்கிறது. அவர்களின் கவலையைப் போக்க முதல் ஆளாக இந்த அரசு நின்றிருக்கிறது. அப்படியான சில நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்துகிறது இந்தக் கட்டுரை.
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கையோடு கொரோனா இரண்டாம் அலை மிகக் கடுமையாக வீசுத் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கால் ஒட்டுமொத்த மாநிலமும் முடங்கியது. அலையின் வீரியத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அரசிடம் போதுமான நிதி இல்லை.

ஆரப்பாளையம் சிறுவன்: ஆகவே, பொதுமக்கள் இந்த அவசரக் காலத்தைச் சமாளிக்க நிதி அளிக்கலாம் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பாக நிதியை அரசுக்கு அளித்து உதவினார்கள்.
அந்த ஊரடங்கு காலத்தில் மதுரை ஆரப்பாளையத்திலிருந்து ஒரு ஆதரவுக் குரல் முதலமைச்சர் ஸ்டாலினின் காதுகளைத் தழுவியது. சிறுவன் ஹரீஷ் வரதன் தான் ஆசை ஆசையாகச் சைக்கிள் வாங்க வைத்திருந்த உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்பு நிதிக்கு அனுப்பி இருந்தான்.
அந்த நிதியோடு ஒரு கடிதத்தையும் எழுதி இருந்தான். அதில் தனது கனவைக் கைவிட்டு, பொதுச்சேவைக்கு இந்தப் பணத்தை அளிப்பதாகத் தெரிவித்திருந்தான். முழுக் கடிதத்தையும் படித்த ஸ்டாலின், அந்தச் சிறுவனைப் பாராட்டிப் பேசினார்.
அதோடு நிற்கவில்லை அவர். அந்தச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ஒரு சைக்கிளை வாங்கிப் பரிசளித்திருந்தார். ஆரப்பாளையத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருந்த அந்தச் சிறுவனின் முகம் தமிழ்நாடு முழுவதும் ஒளிவீசத் தொடங்கியது. அவனது பொதுநலத்தைப் பலரும் பாராட்டினர்.
அதேபோல இதே கொரோனா காலகட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவமும் இருக்கிறது. கொரோனா நோய்ப் பாதிப்பால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் படிப்பை அரசே ஏற்கும் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பெற்றோரை இழந்த பிள்ளைகள்: அப்படிப் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதியாக ரூபாய் 5 லட்சமும் அப்பிள்ளைகளைக் கவனித்துக் கொள்பவர்களிடம் நிவாரணத் தொகையாக 3 லட்சமும் அரசு சார்பில் வழங்கப்படும் என்றார்.
அதன்படி மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டது அரசாங்கம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 500 குழந்தைகளை அடையாளம் கண்டனர் அதிகாரிகள். அதில் முதற்கட்டமாக 5.10 கோடி ரூபாயை 166 பிள்ளைகளுக்கு வழங்கினார் முதலமைச்சர்.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியிலிருந்து வந்த பயனாளிகள் கண்ணீர் மல்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது சுகந்தி என்ற பெண்மணி பேசிய விதம் அரசின் கருணை மக்களின் நலன் மீது எந்தளவு உள்ளது என்பதை வெளிப்படுத்தியது.
அதே நாளில் இன்னொரு பயனாளியான மாணவி தனது தந்தையை இழந்து தவித்தபோது, அரசின் இந்த உதவி எந்தளவு மறுவாழ்வு அளித்துள்ளது என்று விளக்கினார். அவர் விழிகளில் கண்ணீர் வழிய அவர் பேசிய சொற்கள் இந்த அரசின் மீது நற்பெயரை ஏற்படுத்தியது.
இதே கொரோனா இரண்டாவது அலை முடிந்த பிறகு தமிழக அரசு நிவாரணத் தொகையை வழங்கியது. கன்னியாகுமரி பக்கம் கீழ கலுங்கடி என்ற ஒரு சிறு கிராமத்தில், அரசு அளித்த ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களைக் கையில் பிடித்துக்கொண்டு பொக்கை வாய்த் தெரிய வேலம்மாள் பாட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.
அரசு அளித்த அந்த உதவித்தொகை தனது வாழ்வில் எந்தளவுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது என்பதன் சாட்சியாக அந்தப் புகைப்படம் வைரலானது. பாட்டி தலைப்புச் செய்தியாக மாறினார்.

வைரலான வேலம்மாள் பாட்டி: முதலமைச்சர் ஸ்டாலினே அவரது ட்விட்டர் பக்கத்தில் பாட்டி படத்தை வெளியிட்டு, "இந்த ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிரிப்பு" என வர்ணித்திருந்தார். அதன் பிறகு கன்னியாகுமரிக்கு மழை சேதத்தினை பார்வையிடப் போன ஸ்டாலின் அந்தப் பாட்டியை நேரில் சந்தித்தார்.
பிறகு வேலம்மாளுக்கு வீடு இல்லை என ஒரு செய்தி பரவியது. உடனே அந்தப் பாட்டிக்கு அரசு வீட்டை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின். வீட்டைப் பெற அரசுக்குப் பாட்டி 75 ஆயிரம் ரூபாய்க் கட்ட வேண்டிய நிலை. அந்தத் தொகையையும் திமுகவைச் சார்ந்த தொண்டர் பூதலிங்கம் ஏற்றுக் கொண்டு, வீட்டுக்கான உரிய ஆவணத்தைப் பாட்டியிடம் ஒப்படைத்தார்.
சென்னையில் ஒரு சிறுவன். அவன் பெயர் அப்துல்கலாம். தற்செயலாக அவன் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அந்தச் சிறுவன் வீடியோ பேட்டியில், 'ஒற்றுமை இல்லாத நாடு என்ன நாடு? என்னைக் கூட பல்லா பல்லா எனப் பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் நான் யாரையும் வெறுக்கவில்லை" எனக் கூறியிருந்தான்.

யூடியூப் சிறுவன் அப்துல்கலாம்: அடுத்த நாளே முதலமைச்சரிடம் இருந்து அச்சிறுவனின் பெற்றோருக்கு அழைப்பு பறந்தது. இந்தப் பேட்டிக்குப் பிறகு வாடகை வீட்டை காலி செய்ய உரிமையாளர் தொந்தரவு செய்வதாக முதல்வரிடம் சிறுவனின் பெற்றோர் முறையிட்டனர். வீடு இல்லை என்றதால் சென்னை கே.கே நகரில் வீடு கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலே பார்த்தது சிறுவனின் கதை. அடுத்து வருவதோ ஒரு சிறுமியின் கதை.

உதவிக் கேட்ட ஆவடி சிறுமி டான்யா: ஆவடியைச் சேர்ந்த சிறுமி டான்யா. அரிதான முகச் சிதைவு நோயினால் பாதிக்கப்படுகிறார். தனது விகாரமான முகத்தோற்றத்தைக் கண்டு சக மாணவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்வதாகத் தெரிவித்த சிறுமி, தனது சிகிச்சைக்கு உதவுமாறு ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறார்.
மின்னல் வேகத்தில் அரசின் உதவிக்கரம் நீள்கிறது. சிறுமியின் முழு மருத்துவச் சிகிச்சையையும் அரசே ஏற்கிறது. அச்சிறுமிக்குச் சிகிச்சை முடியும் வரை நேரடியாக ஒவ்வொரு அசைவையும் ஸ்டாலின் விசாரித்துக் கொண்டே இருக்கிறார். தன் குடும்பத்தில் ஒருவரைப் போலக் கவனித்துக் கொள்கிறார்.
முழு சிகிச்சையும் முடிந்த பிறகு சிறுமி பள்ளிக்குப் போகிறாரா? உடல்நிலை எப்படி உள்ளது எனக் கள ஆய்வுக்குப் போனபோது பழக்கூடைகளை வாங்கிச் சென்று டான்யாவை பார்த்துவிட்டுத் திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இன்று டான்யா மு.க.ஸ்டாலினின் குடும்பத்தில் ஒருவராக மாறி இருக்கிறார். இதைப் போன்ற சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னால் தமிழகம் பார்க்காதது.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீர் உதவி ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தார்.

அன்று வழக்கம்போல் கோட்டைக்குச் சென்று அண்ணா சாலை வழியே திரும்பிக் கொண்டிருந்தார் அவர். அப்போது ஒரு விபத்து. தனது பாதுகாப்பு அதிகாரிகளை வாகனத்தை நிறுத்த சொன்னவர், கீழே இறங்கி வந்து அடிப்பட்டவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அடுத்த நாள் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்கவும் செய்தார். கடந்த அக்டோபர் 2022 அன்று இதுதான் ஊடகங்களில் ஹைலைட் செய்தியாக மாறியது.
2 ஆண்டுகால இந்த திராவிட மாடல் ஆட்சியில் திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு சம்பவங்கள் தனித்தன்மையானவை. நரிக்குறவர் சமுகத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா, ஒரு யூடியூப் சானலுக்குப் பேட்டி அளிக்கிறார். அதில் அவர் அசரவைக்கும் விதமாக ஆங்கிலம் பேசி அசத்துகிறார். எங்களை சக மாணவிகள் மனிதர்களாகவே மதிப்பதில்லை என்றார்.

நரிக்குறவர் சிறுமி திவ்யா: அந்தப் பேட்டியைப் பார்த்த ஸ்டாலின் மாணவி திவ்யாவைக் கோட்டைக்கு அழைத்து விசாரிக்கிறார். அப்போது திவ்யா, 'தங்களின் சமுகத்தைப் பழங்குடி இனப் பட்டியலுக்கு மாற்ற உதவுங்கள்' என்கிறார். அதைக் கவனமாகக் கேட்ட ஸ்டாலின், ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கிறார்.
அவரது முயற்சியால் பழங்குடி இன பட்டியலுக்கு நரிக்குறவர் இன மக்கள் மாற்றப்பட்டுள்ளனர். பல ஆண்டுகால சமுக பிரச்சினையை உடனடியாக முடித்துக் கொடுக்க இந்த ஒரு சம்பவம் அந்த மக்களுக்கு உதவி இருக்கிறது.
இவரைப்போலவே நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி. கோயில்களில் சமபந்தி விருந்தில் தங்களை உட்கார விடவில்லை என்று யூடியூப் சானலுக்குப் பேட்டிக் கொடுக்கிறார். அந்தப் பேச்சு வைரலாக வலம் வருகிறது. உடனடியாக அமைச்சர் சேகர்பாபு சமபந்தி விருந்திற்கு அஸ்வினியை அழைக்கிறார். தடபுடலாக உணவு பரிமாறப்படுகிறது.

நரிக்குறவ பெண் அஸ்வினி: அஸ்வினியின் முகத்தில் அன்று அப்படி ஒரு மகிழ்ச்சி. பல ஆண்டுகால வேதனைகள் எல்லாம் பறந்து போனதைப் போலப் பேசுகிறார் அவர். அடுத்து ஒரு சர்ப்ரைஸ் அவருக்குக் காத்திருந்தது. சரியாகக் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று முதலமைச்சர் ஸ்டாலினே அஸ்வினியின் பூஞ்சேரி குடியிருப்புக்குப் போகிறார். நான்கரை கோடி ரூபாய் செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அஸ்வினி வீட்டுக்குப் போன முதல்வர், அடுத்து கள ஆய்வின் போது திவ்யா வீட்டுக்குப் போகிறார். அவரது குடும்பத்தினர் ஸ்டாலினுக்கு விருந்து அளிக்கிறார்கள். பாசி மணி மாலைகளை முதல்வருக்கு அணிவிக்கிறார்கள். இப்படி நெகிழ்ச்சியான பல காட்சிகள் அங்கே அரங்கேறுகின்றன.
ஒருவர் தனக்குப் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக சிஎம் செல்லுக்குப் புகார் அளிக்கிறார். அந்தப் புகார் நிறைவேற்றப்படுகிறது.

உதவி கேட்ட முதல்வரின் நண்பர்: ஒரு முறை நேரடி ஆய்வுக்கு வந்த முதல்வர், அந்தப் பல பயனாளிகளுக்கு தொலைபேசி செய்கிறார். அப்படி பட்டா கேட்டவருக்கும் போன் போகிறது. முதல்வர் 'உங்கள் குறை நிறைவேற்றப்பட்டு விட்டதா?' என்கிறார். அவர் 'எல்லாம் சரியா செய்து கொடுத்துவிட்டார்கள்' என்கிறார். மகிழ்ச்சி என்றதும் போன் துண்டிக்கப்படுகிறது.
மறுநாள் ஊடகங்கள் அந்தப் பயனாளியைப் பேட்டி எடுக்கிறார்கள். இது தற்செயலாக நடக்கிறது. அந்தப் பயனாளி சொல்கிறார். 'நான் முதல்வரிடம் சொல்லவில்லை. நான் முதல்வர் ஸ்டாலினுடன் ஒன்றாகச் சேர்ந்து படித்தவன். அவரது கல்லூரி நண்பன். ஆனால், அதை அன்று அவரிடம் நான் சொல்லவில்லை' என்கிறார்.
இந்தப் பேட்டி ஸ்டாலின் கவனத்திற்குப் போகிறது. அடுத்த நாள் தன் நண்பனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியை ஒரு விழாவில் பேசுகிறார் ஸ்டாலின். அதுவே திராவிட மாடல் என்கிறார்.
இப்படி, தியாகராஜ பாகவதர் குடும்ப வாரிசுகளுக்கு உதவியது முதல் சாதாரண மக்கள் வரை அவர் செய்த உதவிகள் பற்றி எழுத உணர்ச்சிப்பூர்வமான பல கதைகள் இந்த ஆட்சியில் நடைபெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications