மகனுக்கு சாதி மறுப்புத் திருமணம்! சம்பந்தி தமிழக சட்டசபை துணை சபாநாயகர்! மயில்சாமி பற்றிய ருசிகரம்!
தமிழ்நாடு சட்டசபையின் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தான் மயில்சாமியின் சம்பந்தி.
சென்னை: ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்ட நடிகர் மயில்சாமி தனது மகனுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டசபையின் துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டியின் இளைய மகளை தான் தனது மகன் அருமை நாயகம் என்ற அன்புவுக்கு மணம் முடித்து வைத்துள்ளார்.
தனது சம்பந்தி திமுகவில் முக்கியப் புள்ளி என்ற போதும் அது குறித்து அவர் யாரிடமும் எந்த நேரத்திலும் பெருமையாக சொல்லிக் கொண்டதில்லை.

நடிகர் மயில்சாமி
நடிகர் மயில்சாமியை பொறுத்தவரை வித்தியாசமானவர் என்றே கூறலாம். வெறுமனே நடித்தோம் பணம் சம்பாதித்தோம் மட்டும் என்றில்லாமல் சமூக அக்கறையுடன் சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளில் துணிச்சலாக குரல் கொடுப்பார். நாத்திகர்களை போல் கருப்புச் சட்டை அணியும் வழக்கம் கொண்டவராக இருந்தாலும், திருவண்ணாமலை அண்ணாமலையாரின் அதிதீவிர பக்தராக வாழ்ந்து வந்தார். தனது மூத்த மகன் அருமை நாயகம் என்ற அன்புவுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார்.

சம்பந்தி துணை சபாநாயகர்
தற்போதைய முதலமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தான் மயில்சாமி மகன் திருமணத்தை நடத்தி வைத்தார். மயில்சாமியின் சம்பந்தி திமுகவில் முக்கியப் புள்ளியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு சட்டசபையின் துணை சபாநாயகராகவும் இருந்து வருகிறார். இருப்பினும் இது குறித்து எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் மயில்சாமி வாய் திறந்ததில்லை. எப்போதும் போல் நடிப்பை தொடர்ந்து வந்தார்.

எம்.ஜி.ஆர். ரசிகர்
இதேபோல் எம்.ஜி.ஆர்.மீது அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்திருந்தவர் மயில்சாமி. தனது இதயத்தில் உள்ள ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். தான் என பல பேட்டிகளில் கூறக்கூடியவர். ஆனால் அதிமுகவை கடுமையாக விமர்சிக்கக் கூடியவர். இப்படி மயில்சாமியிடம் பல குணாதிசியங்கள் உள்ளன. அதேபோல் பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தும் அவர் எந்தக் கட்சியிலும் கடைசி வரை சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேமுதிகவில் இவரை இணைக்க எல்.கே.சுதீஷ் பல முறை முயற்சித்தும் இணைய மறுத்தவர்.

சுயேட்சை போட்டி
திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து 2021 சட்டமன்றத் தேர்தலின் போது சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications