சனிக்கிழமை "சாம்பார்".. திமுகவை சீண்டிய டாக்டர் கிருஷ்ணசாமி.. அந்த "தொகுதி"யாமே.. குறி வெச்சாச்சுபோல
புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி பால் விலை உயர்வை கண்டித்துள்ளார்
சென்னை: எம்பி தேர்தலுக்கான பரபரப்புகள் தமிழக அரசியலில் தென்பட துவங்கி உள்ள நிலையில், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி குறித்த 2 தகவல்கள், களத்தை நிமிர வைத்து வருகின்றன.
எடப்பாடி பாஜக மேலிடத்துக்கு பிடிகொடுக்காமல் உள்ளார்... தன் பிடிவாதத்தையும் தொடர்ந்து தளர்த்திக் கொள்ளாமல் உள்ளார்.. ஒருவேளை அவர் இணங்கி வராவிட்டால், அவரை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டுவிடுவது என்ற முடிவுக்கும் பாஜக வரலாம் என்கிறார்கள்.
வேண்டுமானால், தங்களுடன் இணைந்து செயல்படும் டிடிவி தினகரன், விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஓபிஎஸ், சசிகலா போன்றோர்களை இணைத்து கூட்டணியாக போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற பேச்சும் எழ ஆரம்பித்துவிட்டது.

பாஜக டீல்
அந்தவகையில், இந்த கூட்டணி கணக்கில் டாக்டர் கிருஷ்ணசாமியும் விடாமல் இடம்பிடித்தே வருகிறார்.. பட்டியல் மாற்றம் என்பதே தேவேந்திரகுல வேளாளர்களின் நிரந்தர இலக்காகும். பெயர் மாற்றம் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சமூக அடையாளமாக கருதப்பட்டாலும் பட்டியிலினத்திலிருந்து விலக்கு பெறாமல் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் விடுதலை பெற்றதாகவோ முழு அங்கீகாரத்தையும் பெற்றதாகக் கருத இயலாது என்பதைதான் கிருஷ்ணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அர்ஜெண்ட்
கடந்த வருடம் ஒரு கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசும்போது, "கடந்த காலங்களில் சில இடங்களுக்கு அவசரப்பட்டு கூட்டணி வைத்து தவறிழைத்து விட்டோம்.. நமக்கு அமைந்த கூட்டணிகள் நேர்மையான கூட்டணி இல்லை.. நம்முடைய வாக்குகளை அவர்கள் பெற்று வெற்றி பெற்றார்கள்.. இனி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும், இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம்" என்று கூறியிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. தற்போது எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், 2 விதமான அதிரடிகளை கிருஷ்ணசாமி மேற்கொள்வதாக சொல்கிறார்கள்.

பச்சை படுகொலை
ஒன்று, குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி திமுக அரசை டேமேஜ் செய்வது, மற்றொன்று, பாஜகவின் பாசத்தை விடாமல் தக்கவைப்பது என்ற இருவித வியூகங்களையும் நகர்த்தி வருவதாக தெரிகிறது.. அதனால்தான் கடந்த சில தினங்களுக்குமுன்புகூட, எடப்பாடி நடத்தின உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு நேரடியாகவே சென்று ஆதரவு தந்து, திமுகவை சரமாரியாக கேள்வி எழுப்பினார்.. "அதிமுக எம்எல்ஏக்கள் சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் அதை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயக படுகொலை" என்றார்.. நேற்றைய தினம்கூட, ஆவின் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாம்பார்
செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசியபோது, "பாலை பதப்படுத்துவது, மேலை நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.. அங்குள்ள தட்பவெட்ப நிலை அதுபோல் இருக்கும்.. தமிழகத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.. அவர்களுக்கு சனி, ஞாயிறு மட்டும்தானே லீவு.. சனிக்கிழமை சாம்பாரை வைத்துவிட்டால், அடுத்த 6 நாட்களுக்கும் அந்த சாம்பார்தான்.. ஒரே சாம்பாரை 10, 15 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்வார்கள்.. படித்த டாக்டர்கள், என்ஜினியர்கள் யாராக இருந்தாலும் மேல்நாட்டில் இப்படித்தான் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு இருக்க முடியும்.. நம்முடைய நாட்டின் கால நிலை அப்படி கிடையாது..

90 + 3 மாசம்
இவர்கள் நினைப்பது போல, பதப்படுத்துவது தாங்குமா என்பதையும் பார்க்க வேண்டி உள்ளது.. இப்படி ஒரு விஷப்பரீட்சையில் இறங்குவதைவிட, வழங்கி கொண்டிருக்கும் ஆவின் பாலையே தரத்துடன் தந்தால் நல்லா இருக்கும்.. தண்ணியை அளவோடு கலக்க பாருங்கள்.. பாலில் நடக்கும் கலப்படங்களை தடுத்து நிறுத்த பாருங்கள்.. முறையான விலையில் அந்த பாலை வழங்க பாருங்கள்.. 90 நாள் கழித்து அந்த பாலை பதப்படுத்தி குடிக்க வேண்டிய அவசியம் ஏன் நமக்கு வருகிறது? அதுக்கான தேவையே இங்கே இல்லையே.. இந்த பாலை 3 மாசம் பதப்படுத்தலாம் என்று சொல்லும்போதே, அதில் கெமிக்கல் கலக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.. அதனால் திமுக அரசு இதை தவிர்க்க வேண்டும்" என்று முதல்எதிர்ப்பு குரலாக பதிவு செய்துள்ளார் கிருஷ்ணசாமி.

ஷிப்ட்டிங்
புதிய தமிழகம் குறித்து இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. தன்னுடைய கட்சியை டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கி 25 வருடங்கள் ஆகிவிட்டது.. இதற்காக நவம்பர் 15-ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு வருகிறார்களாம்.. செல்வாக்குமிக்க ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான், தேவேந்திர குல வேளாளர் சமூகவாக்குகளும் மிக அதிகம்... ஆனாலும், ஓட்டப்பிடாரத்தில் போதுமான வெற்றியை சுவைக்க முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியை குறிவைக்கிறாராம் டாக்டர் கிருஷ்ணசாமி..

டபுள் மூவ்
அதற்காகத்தான் முன்னோட்டமாகவே கட்சி மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்பாடு செய்கிறாராம்... ஒருபக்கம் பட்டியல் சமூகத்து வாக்குகள் ஆதரவ என்றால், இன்னொரு பக்கம், இந்துத்துவ அரசியல் முன்னெடுப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மனதிலும் இடம்பிடித்துள்ளதால், ஜீயரின் ஆசியோடு மாநாடு தொடங்கப்படலாம் என்கிறார்கள்.. ஆக மொத்தம், ஓட்டப்பிடாரத்தில் இழந்ததை, ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிடிக்க புது கணக்கை ஓபன் செய்துள்ளார் கிருஷ்ணசாமி.. இது எந்த அளவுக்கு அக்கட்சிக்கு பலன் தரப்போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!!












Click it and Unblock the Notifications