டாக்டருக்கு தொல்லை.. ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ செயலை ஏற்க முடியாது – மருத்துவர் ஜிஆர் ரவீந்திரநாத்
சென்னை: ''ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அரசு மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் பணி முடித்து ஓய்வில் இருந்த மருத்துவரை எழுப்பி தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். டாக்டர் தவறு செ்தது போல் சித்தரிப்பதை ஏற்க முடியாது. இத்தகைய முயற்சியை கைவிட வேண்டும்'' என சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜிஆர் ரவீந்திரநாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதல் அந்த கட்சியின் எம்எல்ஏக்கள், அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் செய்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர்கள், செவிலியர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலஇடங்களில் தவெக கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைகளில் ஆய்வு என்ற பெயரில் அங்கு பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பிற ஊழியர்களிடம் கேள்வி கேட்டு தொல்லை கொடுத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அறை ஒன்றில் உறங்கி கொண்டிருந்த மருத்துவரை எழுப்பி நோயாளிகளை கவனிக்க சொல்லி அறிவுறுத்தினார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
சிலர் இரவு பணியில் பணியை முடித்த நோயாளிகள் இல்லாததால் அரசு மருத்துவர் தூங்கியதாகவும், அவரை எழுப்பி தவெக எம்எல்ஏ சரவணன் தொல்லை கொடுத்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தான் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் செயலுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் பொதுச்செயலாளரான மருத்துவர் ஜிஆர் ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் என்பவர் மருத்துவமனையில் ஆய்வு செய்வதற்காக சென்று, மருத்துவ பணி முடித்து ஓய்வில் இருந்த மருத்துவரை எழுப்பி தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மருத்துவமனைகளில் ஆய்வு செய்வது தவறு கிடையாது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் 12 மணிநேரம், 24 மணிநேரம் என்று தொடர்ச்சியாக பணி வழங்கப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் பணி முடித்து அவரது அறையில் ஓய்வு எடுப்பது தவறு இல்லை.
ஆனால் தவறு செய்தது போல் அவரை சித்தரிப்பதை ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி மட்டுமின்றி, சாதாரண தவெக நிர்வாகிகள் கூட மருத்துவமனை செல்வது, மருத்துவக்கல்லூரிக்கு செல்வது, மருத்துவ கல்லூரி முதல்வர்கள், டாக்டர்கள், செவிலியர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஏற்புடையது இல்லை. இத்தனை முயற்சி கைவிட வேண்டும். முதல்வர் விஜய் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம்'' என்றார்.


Click it and Unblock the Notifications
