குரல் வளையில் வளர்ந்த கட்டி! சில நாட்களுக்கு பேசவே கூடாது! ஜி.கே.மணிக்கு டாக்டர்கள் அட்வைஸ்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை இன்னும் சில நாட்களுக்கு பேசவே கூடாது என அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் அன்புக் கட்டளை போட்டுள்ளனர்.
வன்னியர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முன்பாக ட்ரிபிள் எஸ் என்றழைக்கப்பட்ட சமூக சேவை சங்கம் மூலம் ராமதாசுக்கு அறிமுகம் ஆகியிருந்தார் ஜி.கே.மணி. அவரது துடிப்பான செயல்பாடும் வேகமும் ராமதாஸை யார் இந்த மணி என யோசிக்க வைத்தது.

சொந்த ஊரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றை நடத்தி வந்த அவர், 1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். அதன்பிறகு முழுநேரமாக பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தில் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.
வன்னியர் சங்கத்தில் ஜி.கே.மணி ஆற்றிய பணிகளை அங்கீகரித்து, 1984-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் ஜி.கே. மணிக்கு தியாகச் செம்மல் என்ற பட்டத்தை ராமதாஸ் வழங்கினார்.
1998-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி திண்டிவனத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சிக்கான புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதில் ஜி.கே.மணியை பாமக தலைவராக கொண்டு வருவதாக ராமதாஸ் அறிவித்தார்.
அன்று முதல் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் பாமக தலைவராக பதவி வகித்த ஜிகே மணி கடந்தாண்டு தான் கவுரவத் தலைவராக புரோமோஷன் பெற்று தனது பதவியை அன்புமணி வசம் கொடுத்தார்.
இந்நிலையில் ஜிகே மணியின் குரல்வளையில் ஏற்பட்ட சிறிய கட்டி புண்ணாகி அவரை சில நாட்களாக அவதிப்படுத்தி வந்தது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு கடந்த சனிக்கிழமை அன்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தற்போது மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வரும் அவரை இன்னும் சில நாட்களுக்கு மட்டும் பேசுவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications