பதிவு கட்டணம் + வழிகாட்டி மதிப்பு.. பத்திரபதிவு கட்டணம் மாறுதா? வருவாய் இலக்கை நிர்ணயித்த தமிழக அரசு
சென்னை: பத்திரப்பதிவு துறைக்கான வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.. என்ன அது?
தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன.. இதன் மூலம் வீடு, நிலங்கள் உள்பட பல்வேறு தொழில் சம்பந்தமான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. வருடத்துக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் ஆவணங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்..

பத்திரப்பதிவு: ஆனால், 3 வருடங்களுக்கு முன்பு, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பத்திரப்பதிவுகள் குறைந்துவிட்டன. இதனால், வருமானமும் வெகுவாக குறைந்துவிட்டது.. இதையடுத்து, கடந்த வருடம் அதாவது 2022-ல் வரலாறு காணாத சாதனையை பத்திரப்பதிவு துறை நிகழ்த்தியிருந்தது. பதிவுத்துறை மூலம் வரலாறு காணாத அளவில் அரசுக்கு வருமானம் கிடைத்திருந்தது..
2022-ம் வருடம் கடந்த பிப்ரவரி மாதம் வரை ரூ.12096.36 கோடி வருவாய் எட்டியிருந்தது.. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையை பதிவுத்துறை படைத்திருந்த நிலையில், இப்போது அடுத்த சாதனையை பதிவுத்துறை எட்டிவிட்டது.
சாதனை : இதுகுறித்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.17 ஆயிரத்து 253 கோடி வருவாய் ஈட்டப்படு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், நிகழ் நிதியாண்டில் ஜூலை மாதம் வரையில் ரூ.5 ஆயிரத்து ரூ.611.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
அதேசமயம், வரும் 2023 - 24 நிதியாண்டுக்குள், 20,000 கோடி வருவாய் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இலக்கையும் எட்டிப்பிடித்துவிட பத்திரப்பதிவு துறை ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், பதிவு கட்டணம் உயர்வு, வழிகாட்டி மதிப்பு மாற்றம் காரணமாக, வருவாய் இலக்கு 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதாக, சார் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்...
கிரையப்பத்திரம்: காரணம், கிரைய பத்திரங்களுக்கான பதிவு கட்டணம், 2 சதவீதம் குறைக்கப்பட்டது, பழைய வழிகாட்டி மதிப்பை மீண்டும் அமல்படுத்தியது, போன்ற காரணங்களால், வருவாய், 20 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக அரசு சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை சரிசெய்வதற்காகவே, நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பும், பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட பத்திரங்களின் பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது.. இதைத்தவிர, அடுக்குமாடி கட்டிடங்கள் பதிவு நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், பத்திரப்பதிவு வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் குறைகிறதா: எனினும், குறைந்தபட்ச மதிப்பு, பதிவு கட்டண உயர்வால், பத்திரங்களின் எண்ணிக்கையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. பத்திரங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தால் மட்டுமே, தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியும் என்ற கருத்து மேலோங்கி வருவதால், விரைவிலேயே பதிவு கட்டண உயர்வில் மாற்றம் வரலாம் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications