கார்ப்பரேட் கையில் பத்திரப் பதிவு? இ-ஹப் திட்டத்தால் பத்திர எழுத்தர்கள் போராட்டம்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய இ-ஹப் திட்டத்துக்கு பத்திர எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களிடம் பத்திரம் தயாரிக்கும் பணியை ஒப்படைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் 2வது நாளாக போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. அரசிடம் அவர்கள் முன்வைக்கும் வேண்டுகோள்கள் என்னென்ன தெரியுமா?

தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய இ-ஹப் சேவை மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Document Writers E-Hub Project Property Registration -

ஸ்டார் 3.0 திட்டம்

பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும், பத்திரப்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த இ-ஹப் மையங்கள் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் வழியாகப் பத்திரப்பதிவு செய்துகொள்ள முடியும். ஒரு மாவட்டத்தில் உள்ள சொத்துகளைப் பதிவு செய்வதற்கு தேவையான சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

இ-ஹப் வசதிகள்

மேலும், டிஜிட்டல் டோக்கன் வசதி, அதிவேக வை-பை உள்ளிட்ட நவீன வசதிகளும் இந்த மையங்களில் இடம்பெற உள்ளன. இதற்குச் சாதாரண முறையில் ரூ.2,000 கட்டணமும், தட்கல் முறையில் விரைவாகப் பதிவு செய்வதற்கு ரூ.5,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் வழங்க டெண்டர் விடவும் அரசு முடிவு செய்துள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

அரசின் இந்த நடவடிக்கைக்குத்தான் பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இ-ஹப் மையங்களை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்குப் ஏகப்பட்ட தொகை தேவைப்படும் என்பதால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என அவர்கள் சொல்கிறார்கள்.

இதனால் பல தலைமுறைகளாக பத்திரம் எழுதும் தொழிலில் ஈடுபட்டு வரும் சாதாரணப் பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், பத்திர விற்பனையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கவலையுடன் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, பத்திரம் தயாரிக்கும் பணியைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அதற்கான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், இதனால் சொத்துகளைப் பதிவு செய்ய வரும் சாமானிய மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்..

2-வது நாளாகப் போராட்டம்

இதற்கிடையே, தனியாரிடம் பத்திரம் தயாரிக்கும் பணியை ஒப்படைப்பதற்கான டெண்டரைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பத்திர நகல் எழுத்தர் மாநிலச் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாவும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ-ஹப் திட்டம் தொடர்பான முடிவை அரசு மறுபரிசீலனை செய்து, தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது

உண்மையிலேயே பாதிப்பு உள்ளதா

இ-ஹப் திட்டம் நடைமுறைக்கு வந்தால் உண்மையிலேயே பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா? அல்லது பொதுமக்களின் வசதிக்காகக் கொண்டுவரப்படும் புதிய மாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெக்னாலஜி வளர்ச்சிக்கேற்ப பத்திரப்பதிவுத் துறையில் மாற்றங்கள் வருவது அவசியம் என்றாலும், பல தலைமுறைகளாக இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு பயன் கிடைப்பதுடன், ஏற்கனவே இந்தத் தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில் அரசு தீர்வு காணுமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+