உயிலை எழுதியதுமே சட்டப்படி பதிவு செய்யணுமா? "செல்லாத உயில்" என்பது என்ன? அசையாத சொத்தாக இருந்தால்?
சென்னை: உயில் எழுதவேண்டிய அவசியம் ஏன் வருகிறது? உயில் எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறதா? அப்படியே எழுதி வைக்கப்படும் உயில் எப்போது செல்லுபடியாகிறது? உயில் எழுதினாலும் அது பதிவு செய்யப்பட வேண்டுமா? ஒரு உயில் எப்போது செல்லாத உயிலாகிறது? சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்க உயில் என்று எதனை சொல்ல முடியும்? இதற்கு தீர்வு உள்ளதா? இதனை பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.. இவைகளை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
ஒருவர் உயில் எழுதி வைக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது? உயில் எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லையென்றாலும்கூட, அந்த சொத்துக்களால், பின்னாளில் குடும்பத்தில் பிரச்சனை வரலாம்.. வாரிசுகளுக்குள் மனஸ்தாபம் வந்து உறவுகள் முறியலாம்.

சொத்தை பிரித்துக்கொள்வதிலும் பல தகராறுகள், வன்முறைகளும் வெடிக்க நேரிடுகிறது.. பிறகு இது தொடர்பாக கோர்ட்டை நாட வேண்டி வரும்.. அப்படியே நீதிமன்றத்தையே நாடினாலும், இதில் உடனடி தீர்வை எதிர்பார்க்க முடியாது.
ஆவணங்கள் - உயில் பத்திரம்
இதுபோன்ற நிலைமை பிற்காலத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, முன்கூட்டியே உயிலை எழுதி வைக்க நேரிடுகிறது.. முன்கூட்டியே உயில் எழுதினாலும்கூட, அவரது மரணத்துக்கு பிறகே, அது உயில் பத்திரமாக கருதப்படும். அப்போதுதான் அது செல்லுபடியாகும்.
அந்த சொத்துகளும் அந்த உயிலில் குறிப்பிட்டுள்ளபடி வாரிசுகளுக்குப் பங்கிடப்படும். ஒருவேளை அது இறந்தவரின் பெயரில் இருக்கும் அசையாச் சொத்தாக இருந்தால், உயில் மூலம் அதை அடைந்தவர் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், உயில் நகல் முதலானவற்றை ஒப்படைத்து வருவாய்த்துறை ஆவணங்களைத் தம்முடைய பெயரில் மாற்றிக் கொண்டால் போதும். அதற்கு பிறகு அவர் அதனை, தன்னுடைய தம் விருப்பம் போல கையாளலாம், பிறருக்கு சொத்து மாற்றமும் செய்யலாம்.
சட்டப்படி உயில் பதிவு செய்ய வேண்டுமா
அதேபோல, உயில் எழுதினாலும், அதை சட்டப்படி பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.. பதிவு செய்வது கட்டாயம் கிடையாது.. ஆனால்,
உயிலை பதிவு செய்து கொள்வது நல்லது.. பதிவு செய்யப்படாத உயில், விட்டு செல்பவரின் மரணத்திற்குப் பிறகும் பதிவு செய்யப்படலாம்.. இப்படி பதிவு செய்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அத்துடன், இப்படி பதிவு செய்வதன் மூலம், உயிலின் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படுகிறது
உயிலை எழுதி கையெழுத்திட்டு, அதில் ஸ்டாம்ப் ஒட்டி இரண்டு பேர் அத்தாட்சி கையெழுத்தும் போட்டு அதனை ரிசிஸ்டர் ஆபீஸ்ஸில் முறையாக பதிவு செய்யலாம்,
செல்லாத உயில் என்பது என்ன
செல்லாத உயில் என்பது சட்டப்படி சரியானதாக இல்லாத அல்லது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத உயில் ஆகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் குறிப்பாக, உயில் எழுதும் நபர் மனநிலை சரியில்லாமல் இருந்தாலோ, அல்லது மனநோயாளியாக இருந்தாலோ அந்த உயில் செல்லாது.
அதேபோல, உயில் எழுதுபவர் கட்டாயப்படுத்தப்பட்டோ, அல்லது மிரட்டப்பட்டோ எழுதப்பட்டிருந்தால் அதுவும் செல்லாது.. உயில் எழுதுபவர் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு குறைவாக இருந்தால், அல்லது அவர் சட்டப்படி உயில் எழுத தகுதி இல்லாதவராக இருந்தால் அந்த உயிலும் செல்லாது. சாட்சிகள் இல்லாவிட்டால் அல்லது சாட்சிகள் குறைபாடு உடையவர்களாக இருந்தால், அந்த உயில் செல்லாது.
நீதிமன்றம் தீர்ப்பு
சொத்து பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லாமல், தவறுகளுடன் உயில்கள் எழுதப்பட்டிருந்தால், அதுவும் செல்லாது. சட்ட விதிமுறைகளை மீறினால், அந்த உயில் செல்லாது.
இப்படி ஒரு உயில் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அந்த உயிலின்படி சொத்து எக்காரணம் கொண்டும் பிரிக்கப்பட மாட்டாது.. அந்த சொத்து பொதுவாக சட்டத்தின் அடிப்படையில் வாரிசுகளிடையே பிரிக்கப்படும். எனவே, உயில் எழுதுவதாக இருந்தாலும்சரி, உயில் பற்றின தகவல்களை அறிய வேண்டுமானாலும்சரி, ஒரு சட்ட நிபுணரை அணுகி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications