அமெரிக்கா-பிரிட்டன் பெருமை பேசிய சிதம்பரம்! ‛டாக்டர்’ மன்மோகன் சிங் என குறுக்கே வந்த எச் ராஜா! ஏன்?
சென்னை: இந்தியாவில் முக்கிய அரசு பதவிகளில் பெரும்பான்மை சமுதாயத்தை சாராத மக்களை நியமனம் செய்வது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டனிடம் இருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று ப சிதம்பரம் கூறியதற்கு எச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் ‛டாக்டர்' மன்மோகன் சிங் 10 ஆண்டு பிரதமராக இருந்தார். பாஜகவை தாக்குவதை நினைத்து நம் தேசத்தை சிறுமைப்படுத்த வேண்டாம் என ப சிதம்பரத்தை, எச் ராஜா தாக்கி உள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் சாதனை படைத்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்பட பல வெளிநாடுகளில் உள்ள முக்கிய நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் தலைமை பொறுப்புகளை அலங்கரித்து வருகின்றனர்.
இது இந்தியாவை பெருமைப்படுத்துகிறது. மேலும் இந்தியர்கள் மிகவும் திறமைசாலிகள். அனைத்து துறைகளிலும் இநு்தியர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை பறைசாற்றும் வகையில் தான் இது அமைந்துள்ளது.
இதன் அடுத்தக்கட்டமாக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிற நாடுகளின் அரசியல் களத்தில் இறங்கி ஜொலித்து வருகின்றனர். சமீபகாலமாக வெளிநாட்டில் வசித்து அரசியலில் பிரவேசம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களின் பட்டியல் என்பது நீண்டு கொண்டே செல்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் அந்நாட்டு அரசியலில் சாதித்து வருகின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ்
குறிப்பாக சமீபத்தில் நடந்த அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் வெற்றி பெற்றார். இவரது தாய் தமிழ் பெண். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இதனால் கமலா ஹாரீசுக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் கமலா ஹாரீஸ் தனது சிறுவயதை சென்னையில் கழித்துள்ளார். மேலும் அடிக்கடி தமிழகம் வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். மேலும் கமலா ஹாரீசின் தாத்தா கோபாலன் மன்னார்குடி அருகே பைங்காநாட்டில் உள்ள துளசேந்திரபுரத்தை சேர்ந்தவராவார். இதனால் கமலா ஹாரீஸின் வெற்றி கொண்டாடப்பட்டது.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்
இதன் தொடர்ச்சியாக தற்போது பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி உள்ளார். பிரிட்டன் பிரதமராக முறைப்படி அவர் பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு வயது வெறும் 42 தான். இவரது தந்தை பெயர் யாஷ்வீர். தாய் பெயர் உஷா. ரிஷி சுனக்கின் தந்தை வழி தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் கென்யா குடிபெயர்ந்த நிலையில் அங்கிருந்து ரிஷி சுனக்கின் தந்தை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். மேலும் ரிஷி சுனக்கின் மனைவி அக்சதா, கர்நாடகாவை சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்.

ஊக்கப்படுத்தும் வகையில்...
அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரீஸ், பிரிட்டன் பிரதமராக தேர்வாகி உள்ள ரிஷி சுனக் ஆகியோர் அந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான சமுதாய மக்களை சேர்ந்தவர்கள் இல்லை. இருப்பினும் அவர்கள் திறமையின் காரணமாக நாட்டின் உயரிய அரசியல் பதவிகளை அடைந்துள்ளனர். இது இந்தியாவை சேர்ந்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது.

ப சிதம்பரம் ட்விட்
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி ப சிதம்பரம் நேற்று கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛முதலில் கமலா ஹாரீஸ், இபு்போது ரிஷி சுனக். அமெரிக்கா, பிரிட்டன் மக்கள் தங்களின் நாடுகளில் பெரும்பான்மை இல்லாத மக்களை அரவணைத்து செல்லும் வகையில் அரசின் உயர்பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் இருந்து இந்தியா மற்றும் பெரும்பான்மைவாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இருப்பதாக நான் நினைக்கிறேன்'' என கூறியிருந்தார்.

காரணம் என்ன?
இதன்மூலம் ப சிதம்பரம் பாஜகவை தாக்கி பேசியதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். அதாவது பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதோடு முக்கிய பொறுப்புகளில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதும், தேர்வு செய்யப்படுவதும் இல்லை அவர்கள் கூறுகின்றன. இதனை வைத்து தான் ப சிதம்பரம் ட்விட் பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

எச் ராஜா பதில்
இந்நிலையில் தான் ப சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவுக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா இன்று பதிலளித்துள்ளார். அதாவது ப சிதம்பரத்தின் இந்த ட்விட்டர் பதிவை குறிப்பிட்ட எச் ராஜா, ‛‛இந்தியாவில் பெரும்பான்மை மக்களாக இல்லாத சமுதாயத்தில் இருந்து டாக்டர் மன்மோகன் சிங் நம் நாட்டில் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். எனவே நீங்கள் பாஜகவை தாக்குவதாக நினைத்து நம் தேசத்தை சிறுமைப்படுத்த வேண்டாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications