தங்கம் வாங்காதீங்க, பெட்ரோல் போடாதீங்க.. 12 வருட சாதனை இதுவா? மோடியின் அட்வைஸை வெளுத்த ராகுல் காந்தி
சென்னை: மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் இப்போதைய நிதி நிலவரம் குறித்துப் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.. குறிப்பாக, மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்துள்ள கோரிக்கை, அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என்று அவர் சாடியுள்ளார்..
உலகப் பொருளாதார நிலை மற்றும் நாட்டின் நிதிச் சீரமைப்பைக் கருத்தில் கொண்டு, மக்கள் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.

தங்கம் வாங்குவதை தவிர்க்கலாம்
அதன்படி, திருமண நிகழ்வுகளுக்காக மக்கள் 1 வருடத்துக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எரிபொருள் பயன்பாட்டை சிக்கனப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.. மேலும், சமையல் எண்ணெய், உரம் போன்ற இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவும், மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பிரதமர் அறிவுறுத்தினார்..
பிரதமரின் இந்த அறிவுரைகளை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இது ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து வரும் ஆலோசனையாகத் தெரியவில்லை என்றும், மாறாக இது கடந்த 12 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியையே பிரதிபலிக்கிறது என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி விமர்சனம்
தங்கம் வாங்காதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் எனப் பிரதமர் சொல்வது அட்வைஸ் கிடையாது.. அது அவரது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்ட நெருக்கடி என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்..
அதுமட்டுமல்ல, கடந்த 10 வருட கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது..ஒவ்வொரு முறையும் அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்களுக்குப் போதிய தீர்வு காணாமல், அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்துவது முறையல்ல.. மக்கள் எதை வாங்க வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.. ஒவ்வொரு முறையும் அரசின் முடிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுகட்ட, பொதுமக்களைத் தியாகம் செய்யச் சொல்வது நியாயமற்றது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்..
12 வருட சாதனை இதுதானா
இப்போதுள்ள உலகளாவிய சூழலை முன்வைத்து, உள்நாட்டுப் பொருளாதாரத் தட்டுப்பாடுகளைச் சமாளிக்க அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்துப் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், தங்கம் மற்றும் எரிபொருள் தொடர்பான பிரதமரின் இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.. ராகுல் காந்தியின் இந்தச் சீற்றம், வரவிருக்கும் அரசியல் நிகழ்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications