ஃபுட்போர்டு அடிக்காதீங்க பா.. பிங்க் பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்து உதயநிதி அட்வைஸ்!
சென்னை: கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளை மகளிர் சுலபமாக அடையாளம் காண வசதியாக 'பிங்க்' நிறம் தீட்டப்பட்ட 60 பேருந்துகளின் இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின், மகளிருக்கான கட்டணமில்லா இலவச பேருந்து பயணத் திட்டம் அமலுக்கு வந்தது. டீலக்ஸ் பேருந்துகளை தவிர்த்து நகரங்களில் பயணிக்கும் மற்ற பேருந்துகள் மகளிருக்கு இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான இலவச பிங்க் நிற பேருந்துகள் சென்னையில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

பிங்க் பஸ்
பெண்களுக்கான இலவச நகர பேருந்துகளை அடையாளம் காட்டும் வகையில் 'பிங்க்' நிறத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காரணம் என்ன?
மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு ரூ.1,600 கோடி போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. ஆனால், அவசரத்தில் சில பெண்கள் சொகுசு பேருந்து அல்லது டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.

சேவை தொடக்கம்
எனவே குழப்பத்தை போக்கும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்தின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை மாநில போக்குவரத்து துறை மேற்கொண்டது. இந்தநிலையில் 'பிங்க்' நிற பேருந்துகள் இயக்கத்தை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்
முதற்கட்டமாக 60 பேருந்துகளுக்கு பிங்க் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் மற்ற பேருந்துகளுக்கு பெயின்ட் அடிக்கும் நடவடிக்கை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிங்க் நிற பேருந்துகளின் பயணத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஃபுட்போர்டு அடிக்காதீங்க பா என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். இதன் பின்னர் மக்களுடன் மக்களாக அமர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேருந்தில் பயணம் செய்தது பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications