அரசு கண் மருத்துவமனை அதிரடி..பட்டாசு துகள் கண்ணில் பட்டால் கசக்காதீங்க, சென்னை எழும்பூர் உடனே வாங்க
சென்னை: பட்டாசுகள் வெடிக்கும்போது வெடி மருந்து, தீப்பொறி கண்களில் பட்டால், கண்களை தேய்க்க வேண்டாம் என்றும், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தங்கராணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தங்கராணி கூறியதாவது: "எழும்பூர் அரசு கண் மருத்துமவனையில், பட்டாசுகளால் ஏற்படும் கண் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சை: அவசரகால அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான, அறுவை சிகிச்சை அரங்கமும் தயார் நிலையில் உள்ளன. பட்டாசுகளால், கண்களில் லேசான எரிச்சல், கண்விழிப்படலம் சிராய்ப்புகள் போன்றவை ஏற்படலாம்.
சில நேரங்களில் கண் பார்வை இழப்பு கூட ஏற்படலாம். குறிப்பாக, ரசாயனம் கலந்த பட்டாசுகள், தங்கத்தை உருக்கும் அளவில் 1,800 பரான்ஹீட் டிகிரியில் வெப்பநிலையில் வெடிப்பதால், தள்ளி நின்று பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தீப்பொறி, வெடி மருந்து உள்ளிட்டவை கண்களில் பட்டால், கண்களை தேய்கவோ, கசக்கேவோ கூடாது.
கண் பார்வை இழப்பு: அவ்வாறு செய்தால், ரத்த கசிவு ஏற்பட்டு கண் பார்வை இழப்புக்கான ஆபத்தாக முடிந்து விடும். கண்களையும், முகத்தையும் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். கண்களில் பெரிய அளவில் ஏதேனும் குத்தி கொண்டிருந்தால், அவற்றை அகற்ற முயற்சிக்காமல், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல, பட்டாசு வெடிக்கும்போது கவனமாக வெடிக்கும்படி போலீசாரும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். "முகங்களை பட்டாசு அருகில் கொண்டு செல்வதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கவில்லை என்றால் மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்க வேண்டாம்.. மின்கம்பங்கள் அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பூந்தொட்டிகள், கைக்குண்டுகள் போன்ற பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை கொளுத்தி, சாலைகளில் வெளிப்படையாக வீச வேண்டாம். பட்டாசுகளின் புகையிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
அசம்பாவிதங்கள்: மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல் துறை அவசர உதவி-100, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவசர உதவி எண்-101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்-108, தேசிய உதவி எண்-112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும்" என்று காவல் ஆணையர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications