”நேரில் வர முடியலன்னு விஜய் மன்னிப்பு கேட்டார்” சென்னையில் நிவாரணப் பொருட்கள் வாங்கிய பெண்கள் பேச்சு
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள சிலரை சென்னை பனையூருக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து வர வைத்து தமிழக வெற்றிக் கழக் தலைவர் விஜய் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். நிவாரணப் பொருட்களை பெற்ற பெண்கள் கூறுகையில், "என்னை மன்னித்துவிடுங்கம்மா.. என்னால் நேரில் வந்து பார்க்க முடியல. அதனால தான் உங்கள இங்க வர வைத்து கொடுக்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று விஜய் கூறியதாக தெரிவித்தனர்.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஒரு சில இடங்களில் தண்ணீர் மற்றும் சாப்பாடுக்காக மக்கள் பரிதவிக்கும் நிலைமையும் இருந்தது.

தொடர்ந்து தமிழக அரசு, அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று மக்களை சந்தித்து நிவாரண பொருட்கள், உணவுகள் வழங்கினர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், டிபி சத்திரத்தில் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்த மக்களை நேரில் சென்னை பனையூருக்கு அழைத்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் 300 குடும்பங்களை சேர்ந்த மக்களை குடும்பத்திற்கு ஒருவர் என அழைத்து அவர்களிடம் வாகனத்தில் அழைத்து வந்தார். மேலும் அவர்கள் முதலில் உணவு கொடுத்தார். தொடர்ந்து அவர்களுடன் பேசி, ஒவ்வொருத்தருக்காக நிவாரண பொருட்களை அவரது கையால் வழங்கினார். விஜய் நேரில் சென்று நிவாரண பொருட்கள் வழங்காமல், சென்னை அழைத்து வழங்கியது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நிவாரணப் பொருட்கள் வாங்கிச் சென்ற பெண்கள் விஜய் எங்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளனர். என்னை மன்னித்துவிடுங்கம்மா.. என்னால் நேரில் வந்து பார்க்க முடியல. அதனால தான் உங்கள இங்க வர வைத்து கொடுக்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று விஜய் கூறியதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.
சென்னை பனையூரில் விஜய்யிடம் நிவாரண பொருட்களை பெற்ற பெண் ஒருவர் கூறியதாவது:- அண்ணனை பார்த்தது ரொம்ப சந்தோஷம். இங்க வந்ததுமே எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாங்க.. விஜய் அண்ணா எங்களை பார்த்ததும், சாப்டீங்களா.. எப்படி இருக்கீங்க என்று கேட்டார். இந்த மழைல எப்படி இருந்தீங்க.. வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா.. "என்னை மன்னித்துவிடுங்கம்மா.. என்னால் நேரில் வந்து பார்க்க முடியல. என்று என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்டாங்க.. 2026 தேர்தலில் அண்ணன் தான் வெற்றி பெறனும். அவர் தான் ஆட்சி அமைக்கனும். என்று அந்த பெண் கூறினார்.
மற்றொரு பெண் கூறுகையில், 'எப்படிம்மா இருக்கீங்க.. சாப்டீங்களா.. உங்கள் வீட்டு பக்கத்தில் தண்ணீர் எப்படிம்மா இருக்கு என கேட்டார்.. இப்போ வடிந்துவிட்டது என்று சொன்னோம். யாருமே இப்படி கிட்ட வந்து பேசினது கிடையாது. ரொம்ப கிட்ட வந்து அன்பாக பேசினார். உங்கள எல்லாரையும் நேரில் வந்து தான் பாக்கனும்னு நினைத்தேன். ஆனால் முடியவில்லை. கோச்சிகிடாதீங்கமா.. அதனால்தான் உங்கள இங்க வர வச்சி கொடுத்தோம்.. என்று சொன்னாங்க.. நாங்க பரவால்ல சார்.. என்று சொன்னோம். முதன் முதலில் நாங்க விஜயை நேரில் பார்த்தோம். எல்லாருக்கும் அவர் கையாலே பொருட்களை கொடுத்தார். " என்று கூறினார்.
மற்றொரு பெண் கூறுகையில், 'என்னால வரமுடியலம்மா.. அதனால தான் உங்கள இங்க வர வைத்து கொடுக்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க.. இது சிறு உதவி தான் என்று சொன்னதாக அந்த பெண்' கூறினார். மற்றொரு நபர் கூறுகையில், "விஜய்யை பார்க்கத்தான் நான் இங்கு வந்தேன். இன்னைக்கு வேலை இருந்தது. வேலைக்கு லீவ் எடுத்துவிட்டு இங்கு வந்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என்று கூறினார்.
நிவாரண பொருட்கள் வாங்க வந்திருந்த கீர்த்தனா என்ற சிறுமி கூறுகையில், நான் இப்போது தான் விஜய் சாரை முதல் முதலில் பார்க்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னிடம் சாப்டீங்களா என்று கேட்டங்கா.. சாப்டோம் என்று சொன்னேன். உங்க கிட்ட பேசுறது சந்தோஷமாக இருக்கு என்று சொன்னார். சாப்பிட 2 சாக்லேட் தந்தாங்க.. நான் தேங்க் யூ என்று சொன்னேன்" என்று அந்த சிறுமி கூறினார்.












Click it and Unblock the Notifications