அதெப்படி யூஸ் பண்ணலாம்! EC சொன்ன பிறகும் விடாத பிஎஸ்பி.. மாநாட்டுக்கு இடையே விஜய்க்கு புது சிக்கல்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விஜய் கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை 5 நாட்களுக்குள் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நோட்டிசை சட்டமுறை அறிவிப்பாக கருதி யானை சின்னத்தை நீக்க அறிவுறுத்துகிறோம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருப்பவர் விஜய். தற்போது 69வது படத்தில் நடித்து வரும் விஜய், இதுதான் தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டார். இதற்கு காரணம், நேரடி அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து நடிகர் விஜய் நேரடி அரசியலில் கால் பதித்துள்ளார். சமீபத்தில் தனது கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகம் செய்தார். வரும் 27 ஆம் தேதி தவெகவின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜய்யின் கட்சிக் கொடியில் இடம் பெற்று இருந்த யானை சின்னம், தங்கள் கட்சியின் சின்னம் என்று பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் "கட்சியின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது.
தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னமாக யானையை தவெக பயன்படுத்த முடியாது. ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை" என்று தெரிவித்துள்ளது. இதனால் விஜய் கட்சியினர் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் விஜய்க்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
அந்த நோட்டீசில், தமிழக வெற்றிக் கழக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும். 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நோட்டிசை சட்டமுறை அறிவிப்பாக கருதி யானை சின்னத்தை நீக்க அறிவுறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியில் வாகை மலருடன் இரண்டு போர் யானைகள் இடம் பெற்று இருந்தது. விஜய்யின் கட்சிக் கொடி அறிமுகம் செய்த சில மணி நேரங்களில், கொடி குறித்த பல்வேறு விமர்சனங்களும் எழத்தொடங்கியது. கட்சி கொடியில் இருப்பது வாகை மலரே இல்லை என்பது உள்பட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதில், பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கட்சியின் சின்னத்தை தான் விஜய் அவரது கட்சிக்கு பயன்படுத்தியிருப்பதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கொடியை அறிமுகம் செய்திருந்தார். அதில் எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் அது குறித்து எந்த பதிலும், நடவடிக்கையும் நடிகர் விஜய் எடுக்காமல் இருக்கிறார்.
அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்தம் கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க தாங்கள் வழி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications