SIR : சென்னையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்! 14.25 லட்சம் பேர் நீக்கம்!
சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி வரும் நிலையில் சென்னையிலும் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சென்னையில் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 35.58 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பீகாரை தொடர்ந்து தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைய இருந்த நிலையில் வாக்காளர்கள், படிவங்களை நிரப்பி வழங்குவதற்கு இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல்
அதன்படி டிசம்பர் 14 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக
அதில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் சென்னை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் விடுபட்டவர்கள் பெயரை மீண்டும் சேர்க்க ஜனவரி 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் எத்தனை பேர் நீக்கம்
சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 25,79,676 பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளன. எஸ்ஐஆருக்கு முன்பு 40,04,694 பேராக இருந்த வாக்காளர்கள் தற்போது குறைந்துள்ளது. அந்த 40 லட்சத்தில், 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இறந்த வாக்காளர்கள் எத்தனை
அவர்களில் இறந்த வாக்காளர்கள் 1,56,555 பேரும், முகவரியில் இல்லாதவர்கள் 27,328, குடிபெயர்ந்தோர் 12,22,164 பேரும், இரட்டை பதிவுகள் 18,772 பேர் என மொத்தம் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஆண்கள் 12,47,690 பேரும் பெண்கள் 13,31,243 வாக்காளர்களும் இதர பிரிவினர் 743 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி
முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் 1.86 லட்சம் வாக்காளர் உள்ளனர். துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 1.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ்-ஓபிஎஸ் தொகுதி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 26,375 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் போடி தொகுதியில் 24,386 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 29.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பெயர் இருக்கிறதா என்பதை எப்படி பார்க்க வேண்டும்?
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என பார்ப்பது எப்படி? உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டால் உங்களது பெயர், தொகுதி, வாக்குச்சாவடி இடம், மாவட்ட தேர்தல் அதிகாரி, வாக்குச் சாவடி அலுவலர் உள்ளிட்டோரின் விவரங்கள் கிடைக்கும். இதற்கு voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற ECI இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளத்திற்கு சென்று மேற்கண்ட விவரங்களை பூர்த்தி செய்தால் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பது வந்துவிடும்.












Click it and Unblock the Notifications