Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜ ரகுவரன்.. ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக.. சினிமாவை மிஞ்சிய நாடகம்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய 'ஜிம்' பயிற்சியாளர், சிக்கி உள்ளார்..

உயர்நீதிமன்றம் வரை சென்று பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகே சென்னை ஜிம் பயிற்சியாளர் மாட்டியிருக்கிறார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

 Drama that surpassed cinema for Rs 1 crore insurance money: How did Reel Raghuvaran get caught?

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லானூரில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து கிடந்தது. இந்த குடிசை வீட்டில் ஆண் ஒருவர் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். காலி வீட்டு மனையில் புதிதாக போடப்பட்ட குடிசை தீப்பிடித்து இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து நேரில் சென்ற ஒரத்தி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்?, அந்த குடிசை வீடு யாருடையது? என்று தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில் அந்த வீடு சென்னை அயனாவரத்தை சேர்ந்த 'ஜிம்' பயிற்சியாளர் சுரேஷ் (வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அயனாவரத்துக்கு சென்று சுரேஷ் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெற்றோர் தனது மகனை காணவில்லை என்றார்கள்.

எனவே எரிந்த நிலையில் கிடந்தது சுரேஷாக இருக்கலாம் என்று கருதிய போலீசார், பெற்றோரை அழைத்து வந்து உடலை காட்டியிருக்கிறார்கள்.
பெற்றோர்களும் எரிந்து கிடந்த உடல் தனது மகன் சுரேஷ்தான் என்று கூறினார்கள். இதனையடுத்து போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்களும் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்குகளை செய்து அடக்கம் செய்துவிட்டார்கள்.

இதனிடையே ஒரத்தி போலீசார் சந்தேக மரணம் (இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 174(4) ) என வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். சுரேஷ் எப்படி இறந்தார், அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவரை யாரும் கொலை செய்து வீட்டுக்குள் போட்டு குடிசைக்கும் தீ வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்தார்கள். இதனிடையே சுரேஷ் மரணம் தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்களான வேலூர் மாவட்டம், கலாஸ்பாளையத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (32,) தாம்பரம் அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்திராஜன் (23) ஆகியோரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

இதனிடையே ஜிம் பயிற்சியாளர் சுரேசுடன் வெளியில் சென்ற சென்னை எண்ணூர் அடுத்த எர்ணாவூர் கனாமி குடியிருப்பைச் சேர்ந்த டில்லிபாபு (39) என்ற பெயிண்டரை காணவில்லை. எண்ணூர் போலீசில் அவரது தாயார் லீலாவதி புகார் செய்தார். இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடைபெறாத நிலையில், அவரது தாய் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தார். அதன் பிறகும் டில்லி பாபு குறித்து விசாரணை நடைபெறவில்லை.

இதனையடுத்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் லீலாவதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டில்லி பாபு எங்கே போனார் அல்லது அவருக்கு என்ன ஆனது என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு எண்ணூர் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரடியாக இறங்கி விசாரணையை தீவிரப்படுத்தினார்.

துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் விசாரணைக்கு பின்னர் தான் உண்மைகள் வெளிவர தொடங்கியது. தீயில கருகி இறந்தது சுரேஷ் இல்லை என்பதும் இறந்தது டெல்லி பாபு தான் என்பதையும் கண்டுபிடித்தார். இதையடுத்து ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரித்த போது தான், சுரேஷ் இறக்கவில்லை என்பதும், அவர் அரக்கோணத்தில் உயிரோடு இருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் சென்ற தனிப்படை போலீசார், இறந்து போனதாக நாடகமாடிய சுரேஷை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவருடைய நண்பர்கள் கீர்த்திராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்

கைதான சுரேஷிடம் இறந்ததாக ஏன் நாடகமாடியது ஏன், டில்லிபாபு ஏன் தீயில் கருகி இறந்தார்?, என்பதை 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது சுரேஷ் தனது வாக்குமூலத்தில் போலீசையே அதிரவைக்கும் தகவல்களை வெளியிட்டார். சுரேஷ் தனது பெயரில் ரூ.1 கோடிக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருக்கிறார். அந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றி எப்படி அபகரிப்பது? என்று திட்டமிட்டிருக்கிறார்.

அவரது நண்பர்கள் ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோர் ஒரு புதுமையான சதித்திட்டத்தை சுரேஷிடம் கூறியிருக்கிறார்கள். சுரேஷ் இறந்தால்தான் அந்த பணம் கிடைக்கும் என்கிற நிலையில், இறக்கக்கூடாது, அதே சமயத்தில் நான் இறந்ததாக தகவல் வெளியாக வேண்டும் என்பதை கூறியிருக்கிறார்கள். தீப்பிடித்து இறந்தால் முகம் உள்பட எதையும் யாரும் அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது என்பதால், யாரையாவது தீவைத்து கொன்று, தான் இறந்ததாக நம்ப வைக்க வேண்டும் என்று சுரேஷ் முடிவு செய்தார்.

அந்த திட்டத்தினை சரியாக செயல்படுத்தினால் ஒரு கோடி ரூபாய் பணம் கிடைக்கும். அதற்கு ஒருவர் இறக்க வேண்டும். யாரை பலி கொடுக்கலாம்? என்று யோசித்திருக்கிறார் சுரேஷ். அப்போது தனது நண்பரான டில்லிபாபுவை தீர்த்துக்கட்டி விட்டு நான் இறந்து போனதாக நாடகம் ஆட முடிவு செய்திருக்கிறார்.

அவரை எப்படி தீர்த்துக்கட்டுவது என்று யோசித்தபோது குடிசை வீட்டுக்கு அழைத்து சென்று தீ வைத்து எரித்துக்கொன்று விட்டால் தீ விபத்தில் அவர் இறந்ததாக காட்டி விடலாம். போலீசாரையும் நம்ப வைத்து விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார் சுரேஷ். அவரது சதித்திட்டத்தின்படி டில்லிபாபுவை எனது குடிசை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். வயிறு முட்ட 4 பேரும் மது அருந்தி உள்ளார்கள். டில்லிபாபுவுக்கு அளவுக்கு மீறி மதுவை ஊற்றி கொடுத்துள்ளார்கள். அவர் குடிபோதையால் மயக்கம் அடைந்திருக்கிறார். உடனே அவரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்கள். பின்னர் குடிசைக்கு தீ வைத்துள்ளார்கள். குடிசை எரிந்த விபத்தில் சுரேஷ் தான் இறந்து போனதாக வெளியில் அவரது நண்பர்கள் தகவல் பரப்பினார்கள்.

போலீசாரும் அதை நம்பினார்கள். சுரேஷின் தாயாரும் கருகிய உடலை பார்த்து தன் மகன்தான் இறந்துவிட்டதாக அடையாளம் காட்டினார். இந்த திட்டம் வெற்றிகரமாக அரங்கேறியது. ஆனால் போலீசார் விபத்தில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருக்கிறது. பொதுவாக விபத்தில் இறந்தால் தான் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். சந்தேக மரணம் என்றால் பணம் தரமாட்டார்கள். இதனால் இன்சூரன்ஸ் பணம் தர முடியாது என்று கைவிரித்திக்கிறார்கள். இதனால் சுரேஷின் திட்டத்தில் மண் விழுந்துவிட்டது.

ஒரத்தி போலீசார் மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள். சுரேஷின் நண்பர்களும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை. போலீசாரும் அவரை தேடவில்லை. ஆனால் டில்லிபாபுவின் தாயார் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்ததால் சுரேஷின குட்டு அம்பலமாகி உள்ளது. 1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை அடைய வேண்டும் என்று தன் நண்பர் டில்லிபாபுவை கொன்ற சுரேஷ், உதவிய நண்பர்கள் கீர்த்திராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். சரத்குமாருடன் நடித்த ஒரு படத்தில் ரகுவரன் இன்சூரன்ஸ்க்காக பலே திட்டம் போடுவார். அதே பாணியில் தான் இந்த கிரைம் நடந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+