காசி சங்கமம் சர்ச்சை: கூவி அழைக்கும் பாஜக தலைகள்! யார் அப்பன் வீட்டுப் பணம்? கொந்தளிக்கும் கி.வீரமணி
சென்னை: பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை அய்.அய்.டி.யும் இணைந்து நடத்த்ம் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் காசி சங்கமம் நிகழ்ச்சியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மிக கடுமையாக விமர்சித்து இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்.
காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னை அய்.அய்.டி இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றன. தமிழகத்தில் இருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க இருக்கின்றன. இதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; முன்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்காமல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை அய்.அய்.டி.யும் இணைந்து இந்த 'காசி தமிழ்ச் சங்க மத்தை' நடத்துகிறார்களாம் (தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்கள் இந்தக் கூத்துக்கு இடம்கொடுக்காது என்று கருதி அய்.அய்.டி.யைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டார் களோ?). இதன் அறிமுக நிகழ்ச்சிக்குச் சென்ற ஆர்.என்.ரவி என்ன பேசியிருக்கிறார்? "கடந்த 200 ஆண்டுகளில், நம் வரலாறும், நாம் யார் என்பதும் அழிக்கப்பட்டுவிட்டது. அதனால், நம் நாட்டை நமக்கே மீண்டும் அறிமுகப்படுத்த நாம் முயல வேண்டும். அயல்நாட்டவர்களால் உருவாக்கப்பட்ட 'இந்தியா' என்ற கருத்தாக்கம், 'பாரதம்' என்ற சிந்த னையை மறைத்துவிட்டது" என்று பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி.

ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்திய பார்வை
'India that is Bharat', 'இந்தியா அதாவது ''பாரதம்''' என்று தானே இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. பிறகென்ன 'இந்தியா என்னும் கருத்தாக்கம், 'பாரதம்' என்னும் சிந்தனையை மறைத்துவிட்டது' என்ற புலம் பல்? ஏனெனில், அவர்கள் பார்வையிலேயே இந்தியா வேறு; 'பாரதம்' வேறு. அவர்களுக்கு இந்தியா அவசியமில்லை; பாரதமே வேண்டும். இந்தியா மீதான பற்று, தேசபக்தி என்பதெல்லாம் சால்ஜாப்பு, மாய்மாலம். அதற்குப் பின்னால் இருப்பது பார்ப்பனிய ஆதிக்கத்தைக் காப்பதற்கான உத்தி மட்டுமே! ஆர்.எஸ்.எஸ்.சின் பார்வையில், இந்தியா என்பது மதச்சார்பற்றது. 'பாரதம்' என்பது ஹிந்து மதச் சார்புடையது. இந்தியா என்பது ஜனநாயகம்; 'பாரதம்' என்பது சனாதனம். இந்தியா என்றால் மக்களுக்கு அரசதிகாரம் தரும் குடியரசு; 'பாரதம்' என்றால் ராஜகுருக்களுக்கு அதிகாரம் தரும் முடியரசு. 'பாரதம்' என்றால் அங்கே மனுநீதிதான்! இந்தியா என்றால் அரசமைப்புச் சட்டப்படி சமூகநீதி பேச வாய்ப்பு இருக்கிறது. பழைய பாரதத்தில் ஜாதிக்கொரு நீதிதான் - அதுவும் மனுநீதிதான் (கர்ணன் பாத்திரம் மஹாபாரதத்தில் ஓர் எடுத்துக்காட்டு!).

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆர்.எஸ்.எஸ்.சின் பார்வை தானே, ஆளுநர் ஆர்.என்.ரவியின் பார்வை. அதைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், 'காசிக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது' என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆயிரம் ஆண்டு களல்ல, அதற்கும் முந்தையது என்று வரலாறு இருக் கிறது. அது, ஆணவம் பேசிய வடவர்களை அடக்கித் திரும்பிய வரலாறு! கடந்த நூற்றாண்டிலும் இந்தத் தொடர்புக்கு ஒரு வரலாறு உண்டு. மகான்கள் வாழும் புண்ணிய பூமி என்று சொல்லப்பட்ட காசிக்குச் சென்று, அங்கும் மதத்தின் பெயரால் கயவர்களே உலவுகிறார்கள் என்று கண்டு திரும்பிய பெரியார் தான், இந்து மதத்தின் புரட்டுகளை எடுத்துச் சொல்லி மக்கள் மத்தியில் வெளுத்து எடுத்தார். இந்தத் தொடர்புகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறியட்டும். அப்போது இந்த தமிழ்நாட்டின் அடித்தளம் என்ன என்பது அவருக்குப் புரியும்.

சனாதன தர்மா புத்தகம் சொல்வது என்ன?
அதே காசி - இன்றைய வாரணாசி - 106 ஆண்டு களுக்குமுன்பு - 1916 இல் அங்கே நடந்த 'சென்ட்ரல் ஹிந்து காலேஜ் பனாரஸ்' (Central Hindu College Benares) வெளியிட்ட 'சனாதன தர்மா' என்ற ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் முதல் பகுதியே எப்படி தொடங்குகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். சனாதன தர்மம் என்றால் தானாகவே உருவான மதம், இதன் விதிகள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை, வேதங்கள் மிகவும் பழைமையானவை. சனாதனம் ஆரிய மதம் என்றும் அழைக்கப் படுகிறது. ஏனெனில் ஆரிய இனத்திற்கு அவர்களின் முன்னோர்களால் வழங்கப்பட்ட மதம். ஆரியர்கள் என்றால் உன்னதமானவர் என்று பொருள். மேலும் உலக வரலாற்றில் மற்ற இனங்களைவிட குணத்திலும், தோற்றத்திலும் இவர்கள் சிறந்துவிளங்குகிறார்கள் என்று கூறி, இவர்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
ஆரியர்கள் முதல்முறையாக வட இந்தியாவில் வந்து குடியேறினர். மேலும் அவர்கள் முதலில் குடியேறிய பகுதிக்கு 'ஆர்யவர்தா' என்று பெயரிடப்பட்டது. ஏனெனில் இந்த ஆரியர்கள் வாழ்ந்த பகுதி - இரண்டு கடல் பகுதி; இரண்டு மலைகளுக்கு இடையே [இமயமலை மற்றும் விந்தியமலை], இருந்த பகுதிகளை ஆரியவர்த்தம் என்று அழைக்கிறார்கள்." பிற்காலத்தில் சனாதன மதம் தற்போது ஹிந்து மதம் என்று அழைக்கப்பட்டது.''

சென்னை ஐஐடி எதற்கு?
எதற்காக இந்த சங்கமமாம்? இதற்கும் ஒரு தொழிற்கல்வி நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தமாம்? அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களை உருவாக்க வேண்டிய சென்னை அய்.அய்.டி-க்கு இது என்ன வேலை? காமகோடி அய்யங்கார்களின் கைகளில் அய்.அய்.டி.கள் சிக்கித் தவிக்கும்வரை, அதற்கென ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதற்கு இத்தகைய நடவடிக்கைகளே சான்றாகும். (ஒன்றிய அரசு மட்டுமல்ல; தமிழ்நாடு அரசும் நில ஒதுக்கீடு தொடங்கி, நிதி ஒதுக்கீடுவரை செய்கிறதே!)
உயர் ஆராய்ச்சிக் கல்விக்கான உயர் நிறுவனம் என்று சொல்லப்படும் ஒரு நிறுவனம் இதனைச் செய்ய வேண்டிய அவசியமென்ன? ஏனென்றால், "தேசிய கல்விக் கொள்கையில் (2020) கூறப்பட்டுள்ளபடி இவை பன்முகப்பட்ட கல்வி நீரோட்டங்கள் மற்றும் தொடர் கற்றலின் அவசியத்தின் தேவையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது" என்று இந்தப் ''பசுமாட்டைப்'' பிடித்துத் தென்னை மரத்தில் கட்டியுள்ளார்கள்!

சித்த மருத்துவம் எங்கே?
இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளில் வேரூன்றியிருக்கும் அதேவேளையில், நவீன மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் மனநிலையுடன் ஒத்திசைவான தலைமுறையை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் [தேசியக் கல்விக் கொள்கை (2020)] அளிக்கிறது. கல்விக்கான இந்த சமச்சீர் மற்றும் முழுமையான அணுகுமுறையை, பாடத்திட்ட மற்றும் பாடத் திட்டம் சாராத நிலைகளில் உறுதி செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளையும் இந்தக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. மற்றவற்றுடன், இந்திய அறிவு அமைப்புகளின் செல்வத்தை மிக சமீபத்திய அறிவுடன் ஒருங்கிணைப்பதற்கான ஆராய்ச்சியையும் இந்தக் கொள்கை பரிந்துரைக்கிறது" என்று இதன் சிறப்பைத் தங்கள் இணையதளத்தில் எடுத்துரைப்பவர்கள், இதன் செயல்பாடுகள் என்ன சாதிக்க இருக்கின்றன என்பதையும் சொல்கிறார்கள், கேளுங்கள்: "நவீன மருத்துவத்தை மேம்படுத்த யோகா மற்றும் ஆயுர்வேதம், பழங்கால கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பழங்கால வாஸ்து சில்பத்தை நவீன தொல்பொருளியலுடன் ஒருங்கிணைப்பது அல்லது ராகங்களின் புதுமையான பதிவுகளை உருவாக்குவது, போன்றவை பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்து செறிவூட்டுகின்ற" பணியைத்தான் இது செய்யப் போகிறதாம்! நவீன மருத்துவத்தை யோகாவையும், ஆயுர்வேதத்தையும் கொண்டு மேம்படுத்துவார்களாம். அடடே! அப்படியும், அதில் சித்த மருத்துவம் எனப்படும் தமிழ் மருத்துவத்திற்கு இடமில்லை. ஆனால், இது தமிழ்ச் சங்கமமாம்! நம்புங்கள், வருண தர்மத்தினை வலியுறுத்தும் வாஸ்துவை அறிவியல் அடிப்படையிலான தொல்லியலுடன் போட்டுக் குழப்புவதும், பழைமைக்குப் புதுமை கொண்டு முலாம் பூசுவதும்தான் நோக்கங்களாம்.''தேசபக்தி'' என்ற சொல்லின்மீது, மதவெறியை ஏற்றுவதும், பழைய பண்பாடு, பாரம்பரியம் என்ற பெயரில் ஒற்றை மதச் சாயத்தை ஊற்றுவதும்தான் வெகுமக்களை ஏமாற்றித் தன் வலையில் விழ வைக்க ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடிக்கும் தந்திரங்கள்.
ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தத் தந்திர வித்தையைச் செய்யத்தான் பல கோடி ரூபாய் செலவில் நம் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கப் போகிறார்களா?

யார் வீட்டு பணமாம்?
216 பேர் கொண்ட 12 குழுக்களாம். மாணவர்கள், ஆசிரியர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர், கிராமக் கோவில் பூசாரிகள் என பல துறைகளிலிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் 2500 பேர் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாத இடைவெளியில் (நவம்பர் 16 தொடங்கி டிசம்பர் 13 வரை பல்வேறு குழுக்களாகக் கிளம்பி, (ஒரு குழுவுக்குத் தலா எட்டு நாள்கள் என்ற அளவில்) காசிக்குச் செல்கிறார்களாம். அனைத்துச் செலவுகளையும் அரசு நிறுவனமான அய்.அய்.டி மேற்கொள்ளவிருக்கிறதாம். பண்பாட்டுப் பரிமாற்றம் என்பது உலகளவில் பல்வேறு நாடுகளிடையே வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். இந்தியாவைப் பொருத்தவரை, தென்னாட்டுக்கும், வடநாட்டுக்கும் பண்பாடு வேறு வேறு என்பதால்தான், இங்கே பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற ஒன்றே தேவைப்படுகிறது என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற பெயரில் முழுக்கவும் ஒரு மதச்சார்புடைய நிகழ்ச்சியாகவே இது திட்டமிடப்பட்டுள்ளதே! பண்பாடு என்றால் அது மதம்தானா? மதத்தைப் பண்பாடாகவும், கடவுள் நம்பிக்கையை (அவர்கள் சொல்லில் - ஆன்மீகத்தை) தத்துவமாகவும், புராண, இதிகாசங்களை வரலாறாகவும் காட்டிடும் ஆர்.எஸ்.எஸ். வித்தைதானே இது!

எப்படி தேர்வு செய்தார்? தமிழக அரசு புறக்கணிப்பு?
2500 பேர் செல்ல இருக்கிறார்களாமே! அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்? அங்கே நடக்கவிருப்பது மறைமுக
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமா? பங்கேற்பாளர்களை இந்துத்துவச் சிந்தனைக்கு மடைமாற்றும் முயற்சியா? யாருடைய இன்பச் சுற்றுலா இந்தப் பயணம்? தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தொடர்பைப் பேசுவதற்கான நிகழ்வு என்றால், இதில் தமிழ்நாடு அரசு, அதன் பண்பாட்டுத் துறையின் பங்களிப்பு என்ன? கலந்து ஆலோசித்தனரா? தமிழ்நாடு அரசைத் தவிர்த்துவிட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பேசப் போகிறோம் என்றால், அதன் உள்நோக்கம் என்ன? ஆளுநர் நடத்த விரும்பும் தனி ஆவர்த்தனத்திற்கு ''அய்.அய்.டி. தாளமிடுகிறதா?'' ராஜ்பவனும், அய்.அய்.டி.யும், இருக்கும் சாலை சர்தார் படேல் சாலை என்பதால் ஏதோ, தனியாகத் தனது எதேச்சதிகார எல்லையில் இருக்கின்றது என தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார் போலும் ஆளுநர்! இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். மக்கள் வரிப் பணம் இப்படியா செலவழிக்கப்படுவது? சிந்துவெளி நாகரிகம் - திராவிட நாகரிகம் - கீழடி ஆய்வுகள் இவற்றைப் புறந்தள்ளிவிட்டு, இந்த சங்கமம் வெறும் சங்கிகளுக்கான சங்கமமா? என்ற கேள்வியே எழும்புகிறது. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications