புதின் வீடு மீது 91 டிரோன்கள் தாக்குதல்.. ரஷ்யாவின் குற்றச்சாட்டை மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.
வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி உள்ளார். 91 ட்ரோன்கள் மூலம் புதினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் மாஸ்கோவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை மாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த நெடுந்தொலைவு சென்று தாக்கும் ட்ரோன்களை நடுவானிலேயே அழித்து, தாக்குதல் முயற்சியைத் தடுத்ததாகவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதின் வீட்டின் மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி குறித்து தகவல் அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், புதினை தொடர்புகொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த டிரோன் தாக்குதலை தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது தாக்குதல் ஏதும் நடத்தவில்லை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்திருக்கிறார். உக்ரைன் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்ய அதிபர் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனால் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பதிவில், "அமெரிக்காவின் ராஜாங்க முயற்சிகளை வரவேற்று அமைதி ஏற்பட அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிரதிநிதிகளுடன் உக்ரைன் தரப்பு நெருக்கமாக செயலாற்றி வருகிறது. அப்படிப்பட்ட சூழலில், ரஷ்ய அதிபர் இல்லம் மீது தாக்குதல் என்று உக்ரைன் மீது ரஷ்யா சுமத்தும் பழி வெறும் கட்டுக்கதை. கீவ் மற்றும் உக்ரைனில் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளிலிருந்து விலகுவதற்காக ரஷ்யா எங்கள் மீது பழி சுமத்துகிறது.
இது, வழக்கமான ரஷ்யாவின் பொய்ப்படலங்களில் ஒன்று. கீவில் கடந்த காலங்களில், அமைச்சர்கள் வளாகம் உள்பட முக்கிய அரசு கட்டடங்களை ரஷ்யா தாக்கியுள்ளது.
ராஜாங்க முயற்சிகளை சீர்குலைக்கும் விதத்தில் உக்ரைன் எப்போதும் நடந்துகொள்ளாது. ஆனால் ரஷ்யா அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாடிக்கை. இதுவே எங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களுள் ஒன்று. அமைதியை நிலைநாட்டுவதற்கான செயல்பாடுகளை சீர்குலைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நாம் அனுமதிக்க முடியாது. உலக நாடுகள் இப்போதும் அமைதியைக் கடைப்பிடித்து மௌனம் காக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications