ரொம்ப காஸ்ட்லி பொருளான தக்காளி.. வரும் நாட்களிலும் விலை உயருமா? வியாபாரிகள் கூறுவது என்ன
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் தக்காளி, வெங்காயம் உட்பட காய்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை
இன்று மாலை தொடங்கி அடுத்த சுமார் 12 முதல் 14 மணி நேரத்திற்குச் சென்னை தொடங்கி கடலூர், டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நகரின் பல முக்கிய பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஒருபுறம் மோட்டரை கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், மறுபுறம் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை நீரை வெளியேற்றும் பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ 120 தாண்டிய தக்காளி
இதன் காரணமாகச் சென்னையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் ரூ 70 முதல் 80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி தற்போது 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையிலேயே இந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் சில்லறை விற்பனையில் ரூ 150 வரை தக்காளி விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் புகார்
தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வெங்காயம், கேரட், அவரைக்காய் முருங்கை என அனைத்தின் விலையும் ஒரே வாரத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையைக் காரணமாகக் கூறி வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வியாபாரிகள் விளக்கம்
இருப்பினும் தக்காளி வரத்து குறைந்ததே விலை ஏற்றத்திற்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழக்கமாகச் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 70 முதல் 80 லாரிகளில் 400 டன் தக்காளி வரும். ஆனால், மழையால் இது சரிபாதியாகக் குறைந்துள்ளதாலேயே விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உற்பத்தி அதிகரித்து வரத்தும் உயர்ந்தால் விலை தானாகக் குறையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

விவசாயிகள் கூறுவது என்ன
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் செடிகளிலேயே காய்கறிகள் அழுகிப் போகும் நிலை உருவாகியுள்ளதாலேயே விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கனமழை தொடர்ந்தால் வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். மழை நின்ற பிறகு காய்கறி விலை கட்டுக்குள் வரும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications