வெயிலால் வெஜ் விலை உயர்வு..பதற வைக்கும் பீன்ஸ்! சிக்கனே வாங்கி சாப்பிடலாம்..பூண்டு கிட்ட போக முடியாது
சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. குறிப்பாக பீன்ஸ் விலை பதற வைக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை கவலை கொள்ள செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலம் என்றாலே மே மாதத்தில் தான் வெயில் சுட்டெரிக்கும். ஆனால் தற்போதெல்லாம் ஜனவரி மாதத்தில் இருந்தே வெயில் தனது வேலையை காட்ட துவங்கி விட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் மட்டுமே 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலை தொடும். ஆனால் தற்போது பத்து முதல் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
வெப்பநிலை அதிகரிப்பு: காலை 7 மணிக்கே தொடங்கும் வெயிலின் தாக்கம் இரவு 7 மணி வரை இருக்கிறது. 6:00 மணிக்கு சூரியன் மறைந்து விட்டாலும் இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது என்கின்றனர் மக்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தாலும் அது விவசாயத்தை காக்கும் வகையில் இல்லை. ஏற்கனவே கடும் வறட்சி நிலவிவரும் நிலையில் வெயில் காரணமாக காய்கறிகள் விளைச்சல் ஆனது வெகுவாக குறைந்துள்ளது.
காய்கறிகள்: தக்காளி கத்தரி உள்ளிட்டவற்றை பயிரிட்ட நிலையில் அவை கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் கொங்கு மண்டலங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென்னை விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னை மரங்கள் கருகி அவற்றை வெட்டி விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தான் சிக்கன் வாங்கி கூட சாப்பிடலாம் ஆனால் காய்கறிகள் வாங்கி சாப்பிட முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் சென்னைவாசிகள்.
விலை அதிகரிப்பு: அந்த அளவுக்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை விண்ணை தொட்டுள்ளது. சென்னையின் மிகப் பெரும் சந்தையாக கருதப்படும் கோயம்பேட்டுக்கு தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் அந்த காய்கறிகள் பிரித்து அனுப்பப்படுகிறது தற்போது கோடை வெயில் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சில காய்கறிகளின் விலை இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
கடும் உயர்வு: கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ பீன்ஸ் தற்போது 200 முதல் 230 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சிக்கனின் விலையே சென்னையில் 220 ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த கேரட் தற்போது 70 ரூபாய்க்கும், 90 முதல் விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ அவரைக்காய் 110 ரூபாய்க்கும் சேனைக்கிழங்கு 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் பச்சை மிளகாய் விலையும் 70 ரூபாயாக இருக்கிறது.
என்ன காரணம்?: வெயில்காலம் என்பதால் ஜூஸ் மற்றும் சர்பத்துக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக அதிர வைக்கும் வகையில் ஒரு கிலோ பூண்டு 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோடை வெயில் காரணமாக காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளதாகவும் வழக்கமாக ஒரு நாளைக்கு 700 முதல் 800 வாகனங்களில் காய்கறிகள் வரும் நிலையில் தற்போது 300 வாகனங்களில் மட்டுமே காய்கறிகள் வருவதாகவும் இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனையில் இன்னும் அதிகமாக விலை உயர்வு இருக்கும் என்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications