செம! சென்னையில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள்.. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் உடனே வந்த எம்.டி.சி!
சென்னை: தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னையில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலானோர் புறநகர் ரயில்களை தங்கள் அன்றாட பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதிக்கு ஏற்ப, அதிகளவில் ரயில்களை இயக்கி வருவதோடு, பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஆவடி பணிமனையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள் இன்று இரவு ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரவு 9.45 மணி முதல் இரவு 11.55 மணி வரை இயக்கப்படக்கூடிய 10 மின்சார ரயில்கள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கம் போல சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்படக்கூடிய பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில் ரத்து, மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11:30 மணிக்கு இரவு 11.40 மணிக்கு புறப்படக்கூடிய ஆவடி மின்சார ரயில் இயக்கப்படாது. மூர்மார்க்கெட்டில் இருந்து 10.20 மணிக்கு புறப்படும் ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாளை 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை 4.15 மணி நேரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, பயணிகள் சிரமங்களைச் சந்திக்கக் கூடும் என்பதால், அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தாம்பரம் - சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கபடும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இன்று இரவு 11.45 மணி முதல் 22ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications