தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! கோடை வெயிலால் ஜுன் 10ல் பள்ளி திறக்கப்படும் என அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜுன் 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கோடை விடுமுறையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் மாண - மாணவிகள் ஹேப்பியாகி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

அதேபோல் 1 முதல் 3ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரையும்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. பொதுவாக தமிழகத்தில் பள்ளிகளுக்கான இறுதி தேர்வு என்பது ஏப்ரல் மாதம் இறுதி வரை நடக்கும்.
ஆனால் இந்த முறை லோக்சபா தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மேலும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மே மாத தொடக்கத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது.
இதனால் பள்ளிகள் திறப்பு ஜுன் 2வது வாரத்துக்கு தள்ளிப்போகும் என கூறப்படுகிறது. ஆனால் மே 5ம் தேதிக்கு பிறகு பல மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. கோடை வெயில் மாயமானது. இதனால் பள்ளி கல்வித்துறை மனம்மாறியது. அதோடு தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜுன் 6ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜுன் 6ம் தேதிக்கு பதில் ஜுன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் கோடை வெயில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் மாணவ-மாணவிகளின் நலன்கருதி பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜுன் 6ம் தேதிக்கு பதில் ஜுன் 10ல் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமாநிலங்களில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பீகாரில் 49 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அங்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தான் பள்ளி திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 நாட்கள் கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் ஹேப்பியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications