எந்த கொம்பனாலும் முடியாது! பேசாத விஜய்யால்.. தமிழ்நாட்டுக்கு பெரிய பிரச்சினை! திமுக ’மாஜி’ விளாசல்!
சென்னை: தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் எந்த கொம்பனாலும் காவிரியில் அணை கட்ட முடியாது. காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் போக்கு மிக பெரிய பிரச்சனையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் என முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எங்கு சென்றாலும் அதனை தெளிவாக சொல்வதில்லை எனவும் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," எதற்காக டெல்லிக்கு செல்கிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறினாரா?

தமிழ்நாடு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் மேகதாதுவில் அணை கட்டுவேன் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகிறார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் அணையை கட்டுவேன் என்று கூறுகிறார் என தெரியவில்லை.
துரைமுருகன்
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்த கொம்பனாலும் மேகதாதுவில் அணைக்கட்ட முடியாது. முதலமைச்சர் எங்கு சென்றாலும் அதனை தெளிவாக சொல்லிவிட்டு செல்வதில்லை. எங்கு சென்றாலும் முதலமைச்சர் தெளிவாக சொல்லிவிட்டு செல்ல வேண்டும். காவேரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் போக்கு பெரிய பிரச்சனையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும்.
டிகே சிவக்குமார்
கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் அமைச்சரானதில் இருந்தே மேகதாது அணையை பற்றியே பேசி வருகிறார். நாங்கள் கட்டுவோம் என சொல்வதே முடியாது காரியம். இரு மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளில் எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக அணையை கட்டுவது நீரை தேக்கி வைப்பது என்பது முடியாத காரியம். எங்கெல்லாம் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆறு ஓடுகிறது அங்கெல்லாம் பிரச்சனை தான்.
காவிரியில் அணை
முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, காவேரி உள்ளிட்ட ஆறுகளிலும் பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் முல்லை பெரியாறு அணையை பலப்படுத்துவது, கூடுதல் அணை கட்டுவது கேரளாவில் முடிவெடுக்க முடியாது. அது நம்மை சார்ந்த ஒரு பிரச்சனை. அதே போன்று தான் காவிரியும். காவிரியில் நாங்கள் அணை கட்டுவோம் என்பதே அபத்தம். அதற்கு வாய்ப்பிருந்தால் இந்நேரம் கட்டியிருப்பார்கள் ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.
மத்திய நீர்வள ஆணையம்
எப்படியாவது ஒப்புதல் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள் அது நம்மிடம் கிடையாது. சட்டப்படியாக நீதிமன்ற உத்தரவும் இல்லை.நீதிபதி சொல்லிவிட்டால் கூட அணையை கட்ட முடியாது. அதற்கான ஆயத்தங்களை எடுக்க வேண்டும். முதலில் மத்திய நீர்வள ஆணையத்திற்கு செல்ல வேண்டும், வனத்துறை, சுற்றுச்சூழல் இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி வர வேண்டும்.
கர்நாடகா
ஏற்கனவே ஒரு முறை நம்மை கேட்காமல் மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக கூறி வனத்துறைக்கு அனுப்பினார்கள் அப்போது அனுமதி கொடுக்க முடியாது என அனுப்பி விட்டார்கள். தடைக்கல்களைத் தாண்டுவது என்பது சுலபம் அல்ல. அவர் ஆர்வத்தின் காரணமாக சொல்கிறாரே தவிர, இது ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதுவரை நீதிமன்றம் போட்ட உத்தரவை கர்நாடகா இதுவரை மதித்து கர்நாடகா நீர் திறந்துள்ளதா?" என்றார்.
மேகதாது அணை
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டிகே சிவகுமார், "மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. எந்த கண்டனங்களுக்கும் அஞ்ச மாட்டோம்" என பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இதுவரை அது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
