"All Good"னு ஸ்டாலினுக்கு ஒரே ரிப்போர்ட் தந்த "அந்த மூவர்"! துர்காவின் புலன் விசாரணையில் ஷாக் தகவல்
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியுற்றதற்கான காரணங்களை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்த புலன் விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. 5 ஆண்டுகளாக ஒரே ரிப்போர்ட்டை கொடுத்து ஸ்டாலினை ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது.
தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்த தோல்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் பணியைத் தலைவரின் மனைவி துர்கா ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி தொடங்கியுள்ளார்.
வெற்றிப் பயணத்திற்கு ஏற்பட்ட முற்றுப்புள்ளி
வரலாறு: கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை வென்றவர் ஸ்டாலின். குறிப்பாக 2021-ல் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சரான பிறகு, இத்தொகுதிக்கு எனச் சிறப்புப் பள்ளிகள், மருத்துவமனைகள், நவீன நூலகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பூங்காக்கள் எனப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். மாதம் இருமுறை மக்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தோல்வி: இத்தனை செல்வாக்கு இருந்தும், நான்காவது முறையாகப் போட்டியிட்டபோது தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்தார்.
துர்கா ஸ்டாலினின் ரகசிய விசாரணை
தோல்வியால் சோர்ந்து போயிருக்கும் தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தவும், உண்மையை அறியவும் துர்கா ஸ்டாலின் தனது பழைய தொடர்புகளைப் பயன்படுத்த உள்ளார். முன்பு பொங்கல் மற்றும் திருமண விழாக்களில் தான் சந்தித்த மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களிடம் (சுமார் 20-க்கும் மேற்பட்டோர்) தலா 10 நிமிடங்களுக்கு மேல் ரகசியமாகப் பேசினார்.
விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
இந்த உரையாடல்களின் போது பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள்.
புறக்கணிக்கப்பட்ட மனுக்கள்: "தொகுதிப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஸ்டாலின் வீட்டிற்கு அனுப்பிய கடிதங்கள் படிக்கப்படாமலே குப்பையில் வீசப்பட்டன. அவற்றை அப்போதே கவனித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது" எனப் பெண்கள் ஆதங்கப்பட்டனர்.
வெளிப்படையான ஏமாற்று வேலை: கட்சி நிகழ்ச்சிகளில் தொகுதி மக்களைக் காட்டாமல், வெளியூர்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து கூட்டத்தைக் காட்டி ஸ்டாலினை நிர்வாகிகள் ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர்.
நிர்வாகக் குழப்பம்: தொகுதியில் உண்மையாகவும், தன்னார்வத்துடனும் பணியாற்ற முன்வந்த நிர்வாகிகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் தொய்வு: "சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதிக்காக 10-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரப் பணியாற்றியது போல, கொளத்தூரில் எந்தப் பணியும் நடக்கவில்லை" என்பதே தோல்விக்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
துர்கா ஸ்டாலின் நடத்திய இந்தத் தீவிர விசாரணையின் முடிவுகள் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், கொளத்தூர் பகுதியில் மெத்தனமாகச் செயல்பட்ட மற்றும் தவறான தகவல்களை வழங்கிய தி.மு.க. நிர்வாகிகள் பலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொளத்தூர் தொகுதியில் எஸ்ஐஆர் மூலம் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் சேகர்பாபு பேச்சை கேட்டு அந்த கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை போட்டியிட வைத்து தோற்கடிக்கப்பட்டார் என பலர் விமர்சித்து வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி துர்கா ஸ்டாலின் புலன் விசாரணையை தொடங்கினார்.
உண்மை என்ன?
இதுகுறித்து துர்கா நடத்திய புலன் விசாரணையில் தெரியவந்த தகவல்கள்: 5 ஆண்டுகளாக, பெண்கள் உள்பட பல தரப்பட்டவர்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக தவறான அறிக்கை ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் செயல்பாடுகளால் மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சபரீசனின் தேர்தல் வியூக வகுப்பு நிறுவன உயரதிகாரி, உளவுத் துறை அதிகாரி, முதல்வரின் உதவியாளர் என மூவர் அணி அறிக்கை வழங்கி வந்ததாம்.
அது மட்டும் இல்லாமல் திமுக எம்எல்ஏக்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்க பரிந்துரை செய்தனர். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது சொந்த கட்சியினரே அதிருப்தியில் இருந்ததை மறைத்துவிட்டனராம். இவர்களின் அறிக்கையை ஸ்டாலின் நம்பி வந்துள்ளார். இவ்வாறு அந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications