14 ஆயிரம் கோடி சம்பாதித்தேன்! நான் ஒரு முட்டாள்? ஏர்செல் முதலாளி பேச்சு! யார் இவர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெலிகாம் துறையில் தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிய ஏர்செல் தொழிலதிபர் சிவசங்கரன் அளித்துள்ள பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்றைக்கு டெலிகாம் துறை உச்சத்தில் உள்ள நிலையில், அதைப்பற்றி அதிக விழிப்புணர்வே இல்லாத காலத்தில் அதைப் பற்றிச் சிந்தித்து அதற்குப் புதிய பாதையைப் போட்டுத் தந்தவர் ஏர்செல் தொழிலதிபர் சிவசங்கரன். இவரது ஸ்டெர்லிங் குழுமம் தொலைத்தொடர்புத் துறையில் உண்மையிலேயே ஒரு புரட்சியைச் செய்தது.

Aircel Sivasankaran Chennai

மாபெரும் சக்ரவர்த்தியாக வலம் வந்த இவரை 2014 ஆம் ஆண்டு செஷ்ல்ஸ் உச்சநீதிமன்றம் திவாலான தொழிலதிபர் என அறிவித்தது. அதன்பின்னர் அவர் ஷீஷெல்ஸ் குடியுரிமை பெற்றார். அங்கே சொத்துகளை வாங்கினார். அங்கே ரிசார்ட்களை உருவாக்கினார் எனப் பல தகவல்கள் வெளியாகின.

ஒரு காலத்தில் இவர் தொட்டது எல்லாம் பொன்னானது. அதே கரத்தால் ஒரு காலகட்டத்தில் தொட்டது எல்லாம் வைக்கோல் ஆனது என்றும் சொல்ல தொடங்கினார்கள். ஆனால், எலக்ட்ரானிக்ஸ் துறையில் இவர் ஒரு வெற்றியாளர். எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் இந்தத் துறைக்குள் புகுந்து அவரது கொடியைப் பறக்கவிட்டார். குறைந்த விலையில் பிசியை வாங்கி, அதை ஒரே நாளில் டெலிவரி செய்து காட்டினார். இதனால் கணினித் துறையின் முகத்தையே மாற்றிக் காட்டினார்.

ஆனாலும் அவர் வைத்த அகலக் கால், அரசியல் குறுக்கீடுகள் என ஒரு கட்டத்தில் சிவசங்கர் அல்லாடினார். பல காலங்களாக அவர் வெளிச்சத்திற்கு வரவே இல்லை. ஒருவருடன் முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் தொழிலதிபர்கள் மிரட்டப்பட்டதைப் போல மோடி ஆட்சியில் மிரட்டப்படவில்லை. சுதந்திரமாகத் தொழில் செய்து வருகின்றோம் என்று சொன்னார். இப்போது தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பற்றி இந்தத் தொழிலதிபர் பல உண்மைகளை உடைத்துப் பேசியுள்ளார்.

தன்னை ஒரு முட்டாள் என்றும் கூறியுள்ளார். அவரை கோபிநாத் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்காக பேட்டி எடுத்துள்ளார். அதில்தான் சிவசங்கரன் இப்படி பகிரங்கமாகப் பேசி உள்ளார். அந்தப் பேச்சு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது பேட்டியில் சிவசங்கரன், "நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் வண்ணாரப்பேட்டை தான். பக்கா சென்னை பையன். பச்சையப்பன் கல்லூரியில் எக்னாமிகஸ் படித்துவிட்டு, முதல் தொழிலாக மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் கடை ஒன்றைத் தொடங்கினேன். அதற்குப் பெயர் சரவணா இஞ்ஜினியரிங். பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக்சிட்டி போர்டு தயாரித்து டெலிவரி கொடுக்க 3 வருடம் கெடு சொல்வார்கள். நான் அதே பொருளை 90 நாட்களில் டெலிவரி கொடுப்பேன். இந்தியாவில் நான் மட்டும் தான் அப்போது இருந்தேன். எனக்குப் போட்டி கிடையாது. அதன்பின்னர் இஞ்ஜினியரிங் தொழிலிருந்து வேறு பக்கம் தாவினேன். சிவா கம்ப்யூட்டர் கமெனியை தொடங்கினேன். அதுகூட கம்ப்யூட்டரை மிகவேகமாக டெலிவரி செய்யும் கம்பெனியாக அன்றைக்கு இருந்தது.

பலருக்கு பிசினஸ் என்றால் என்ன என்பதே புரிவதில்லை. முதலில் நாம் செய்யும் தொழிலுக்கு வாடிக்கையாளர் தேவை. அடுத்தது லாபம். அது இல்லாமல் ஒரு தொழிலை யாரும் செய்யவே முடியாது. அடுத்து தொழில் போட்டி. நாம் ஒரு தொழிலைச் செய்யும் போது நம்மைவிட வலிமையானவன் வந்து நம்மைச் சாப்பிட்டு விடுவான். ஆகவே, எப்போதும் விழிப்பாக இருக்கவேண்டும். புலியுடன் நீங்கள் காலை உணவு சாப்பிட்டால், நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு புலி உங்களைச் சாப்பிட்டுவிடும். ஆகவே எப்போதும் தொழில் செய்யும்போது தொலைநோக்கு பார்வை வேண்டும். இவ்வளவுதான் சார் பிசினஸ் என்பது.

தொழில் செய்வதற்குப் பணமே தேவையில்லை. நீங்கள் நல்ல தொழில் செய்ய ஐடியா வைத்திருந்தால், உங்களை நம்பி பலரும் பணத்தைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். ஆகவே, தொழில் செய்யப் பணம் தேவையில்லை. ஐடியா தான் வேண்டும். உங்களிடம் நல்ல தொழில் தொடங்குவதற்கான திட்டம் இருந்தால், அதைப் பணம் உள்ளவர்களிடம் கூறி புரியவைத்து, முதலீடு செய்ய வைக்கும் திறமை உங்களிடம் இருந்தால் போதும். மத்திய அரசு 25 லட்சம் தொழில் தொடங்க கொடுக்கிறது. அதைக் கொண்டு நீங்கள் தொழில் தொடங்கலாம்.

அப்படிச் செய்ய உள்ள தொழில் லாபகரமானது என்பதை வங்கி மேலாளரிடம் பேசி நீங்கள் புரியவைக்க வேண்டும். அது தெரிந்தால் போதும் பணம் வந்துவிடும். அப்புறம் ஒரே தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். இடையில் கவனத்தை வேறு தொழில் பக்கம் மாற்றிச் சிதற அடிக்கக் கூடாது. நான் அப்படித்தான் செய்தேன். நான் ஒரு முட்டாள். என்னை ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டாம். நான் 14 ஆயிரம் கோடியைச் சம்பாதித்தேன். எனக்கு ரத்த அழுத்தம் வந்த போது கம்பெனிகளை விற்றேன். நான் 20% பாரதி டெலிவென்சன் பங்குகளை வைத்திருந்தேன்.

நான் என் கம்பெனி பங்குகளை வெளியே விற்றபோது சுனில் பாரதி மிட்டல் அதை ஆவணப் பதிவு செய்ய மறுத்தார். ஆனால் நான் 150 கோடிக்கு விற்றேன். ஆகவேதான் சொல்கிறேன், வெற்றி பெறவேண்டும் என்றால் ஒருவிசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நான் ஒரு தொழிலதிபரே கிடையாது. நான் கண்ணதாசன் கவிதைகளைப் படித்துவிட்டுக் கெட்டுப் போன ஒரு சாதாரண மனிதன். அர்ஜெண்டினா நாட்டில் ஆலிவ் கார்டன் வாங்கினேன். ஆஸ்திரேலியாவில் தோட்டம் வாங்கினேன். பப்புவா நியூ கினியாவில் 2 லட்சம் ஏக்கரில் பாமாயில் எண்ணெய்க்காக ஒருவித பனை மரங்களை உற்பத்தி செய்தேன். கண்ணதாசன் சொல்வதைப் போன்று விதவிதமான அனுபவத்திற்காகச் செய்து பார்த்தேன்.

நான் எந்தப் பொருளையும் விற்பதற்காகத் தொழில் செய்யவில்லை. நான் வியாபாரி அல்ல. மக்களுக்கு எது தேவை என்பதைக் கண்டறிந்து அதை நான் தயாரித்தேன். அதை மக்கள் வாங்கினார்கள். ஒரு நல்ல பொருளை மக்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் விற்க வேண்டாம். அவர்களே வந்து வாங்குவார்கள்” என்று பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் குறுக்கீட்டால் சிவசங்கரன் அவரது நிறுவனத்தை இழந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்னால் சர்ச்சை எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் மாதம் இவர், "அரசியல்வாதிகள் தலையிட்டதால் நான் எனது நிறுவனத்தை இழந்தேன்" என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+