"யாரா இருந்தா என்ன?".. போலீஸ் குடியிருப்பில் பிடுங்கப்பட்ட 'ஃப்யூஸ்'.. 'மாஸ்' காட்டிய மின்வாரியம்
சென்னை: லட்சக்கணக்கில் கரண்ட் பில் கட்டாததால் ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள ஃப்யூஸை மின்வாரிய அதிகாரிகள் பிடுங்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்யூஸ் எடுக்க வந்த மின்வாரிய அதிகாரிகளிடம் காவல்துறை அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது "யாராக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும், எல்லோருக்கும் ஒரே ரூல்ஸ்தான் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக போலீஸாரும், அவர்களின் குடும்பத்தினரும் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

தவறாக பயன்படும் அதிகாரம்
நாட்டில் உள்ள சட்டத்திட்டங்கள் அனைத்தும் சாமானியர்களிடம்தான் வேலையை காட்டும் என பொதுமக்கள் அடிக்கடி சொல்வதை கேட்டிருப்போம். நாமும் சில சமயங்களில் இதை நேரில் பார்த்திருப்போம். ஒரு சாமானியன் விதிமீறலில் ஈடுபட்டால் அவர் நடத்தப்படும் விதமும், அதிகாரத்தில் உள்ளவர்கள் விதிகளை மீறினால் அவர்கள் நடத்தப்படும் விதத்தையும் யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு ஏன்? ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டம் தமிழகத்தில் உள்ளது. ஆனால், போலீஸார் பலர் ஹெல்மெட் அணியாமல்தான் செல்கின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஆவடி போலிஸ் குடியிருப்பு
இவ்வாறு அதிகாரப் பதவியில் இருப்பவர்களை சட்டம் ஒன்றும் செய்யாது என்பதை பொய்யாக்கும் விதமாக, ஆவடியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆவடியில் உள்ள எஸ்எம் நகரில் தமிழக காவல் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த மாத மின்சாரக் கட்டணமான ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பிடுங்கப்பட்ட ஃப்யூஸ்
இதனிடையே, நிலுவையில் உள்ள இந்த மின் கட்டணத்தை செலுத்தக் கோரி, பல முறை மின்சார வாரியம் சார்பில் காவலர் குடியிருப்புக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஆனால், மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. இந்நிலையில், நேற்று அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் காவலர் குடியிருப்பின் பொது ஃப்யூஸை எடுக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீஸார், மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

யாரா இருந்தா என்ன?
அப்போது மின்வாரிய அதிகாரிகள், "நீங்கள் யாராக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எல்லோருக்கும் ரூல்ஸ் ஒன்றுதான்" எனக் கூறி ஃப்யூஸை எடுத்துச் சென்றனர். இதனால் சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் போலீஸாரும், அவர்களின் குடும்பத்தினரும் அவதிப்பட்டனர். பின்னர், மின் கட்டணம் செலுத்தப்பட்டதை அடுத்து, காவலர் குடியிருப்புக்கு மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications