கரண்ட் பில் ஓவரா வருதா? இபி பில் கட்டணத்தில் வருகிறது மாற்றம்.. மின்வாரியம் அதிரடி.. பறந்த உத்தரவு
சென்னை: மின்சார வாரியம் பல்வேறு அதிரடிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமல்படுத்தி வரும்நிலையில், மின்கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாகவே, வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில் முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன..

அதாவது, மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, பல ஊழியர்கள் குறித்த நாளில் செல்வதில்லையாம்.. மேலும், தங்கள் இஷ்டத்திற்கு கணக்கு எடுப்பதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில்கூட, மானிய சலுகையின்றி, அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறதாம்.. இப்படி பல குற்றச்சாட்டுகள் கிளம்பியதால்தான், இந்த விஷயத்தில் தற்போது மின்வாரியம் தலையிட்டுள்ளது..
முறைகேடுகள்: இந்த முறைகேடுகளை தடுப்பதற்காகவே, மின் இணைப்புகளில் ஆய்வு செய்யுமாறு, மின் வாரியமானது, பொறியாளர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் மலர்விழி சுற்றறிக்கையை நேற்றைய தினம் அனுப்பியிருந்தார்..
அந்த அறிக்கையில், "கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில், குறைந்தது, 10 சதவீத இணைப்புகளை, அதிகாரிகள் தேர்வு செய்ய வேண்டும்...
கணக்கீடு: அதில், செக் ரீடிங் எனப்படும் மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை சோதனை செய்ய வேண்டும்... மின் கணக்கீட்டின் துல்லியத்தை உறுதி செய்யும்படி, அனைத்து ஆய்வு அதிகாரிகளையும் அறிவுறுத்த வேண்டும். இதனால், உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் வாயிலாக, நுகர்வோரின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது..
மற்றொரு அறிவிப்பு: இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை நிதி கட்டுபாட்டு அதிகாரி மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"மின் கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக தன்னிச்சையான, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க மற்றும் உரிய காலத்தில் உண்மையான கணக்கெடுப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய, சோதனை மின்அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கள ஆய்வு செய்யும் அலுவலர்கள், ஆய்வு செய்யப்படும் பிரிவில் களஆய்வு நாளின் கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில் குறைந்த பட்சம் 10 சதவீத மின் இணைப்புகளை தேர்ந்தெடுத்து சோதனை மின் அளவீடு எடுப்பதன் மூலம், மின்கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி அனைத்து சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும்.
குளறுபடிகள்: உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம். மேற்படி குறைபாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும்" என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.. வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில் முறைகேடுகளை தடுப்பதற்காக, மின்வாரியம் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளானது, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், நம்பிக்கையையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications