2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. தவெகவின் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடிக்கும் இரண்டு பேர்?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு தேர்தல் அட்டவணை
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தேர்தல் பணிகள் உடனடியாக தொடங்குகின்றன:
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 16
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: செப்டம்பர் 17
வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: அக்டோபர் 9
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தொகுதிகள் காலியானது எப்படி?
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேலும், தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமாவும் வெற்றி பெற்றனர்.
அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். குறிப்பாக:
மரகதம் குமரவேல் (மதுராந்தகம்)
சத்யபாமா (தாராபுரம்)
எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை)
இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்)
சி. விஜயபாஸ்கர் (விராலிமலை)
எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்)
ஆகிய 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெவ்வேறு கட்டங்களில் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் அந்த இடமும் காலியானது. இதனால் தமிழக சட்டசபையில் மொத்தம் 7 இடங்கள் காலியாயின.
7 தொகுதிகளில் 2 இடங்களுக்கு மட்டும் தேர்தல் ஏன்?
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும்போது, ஏன் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழலாம்.
மீதமுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளில் கடந்த பொதுத்தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வராத காரணத்தால், அந்த 5 தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. சட்டச் சிக்கல்கள் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக சார்பில் இவர்களுக்கே மீண்டும் சீட் கிடைக்குமா?
அதிமுக சார்பில் நின்று எளிதாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா இருவரும் தற்போது ஆளுங்கட்சியான தவெகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மரகதம் குமரவேல் தவெகவின் துணைப் பொதுச் செயலாளராகவும், சத்யபாமா மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் எம்.எல்.ஏ. பதவியை விட்டுக்கொடுத்து கட்சிக்கு வந்தவர்கள் என்பதால், இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் இவர்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களத்தில் பலப்பரீட்சை
இந்த இடைத்தேர்தல் தவெக, அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு மிக முக்கியமான களமாக மாறியுள்ளது. தாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தீவிரமாக உள்ளது. அதே சமயம், தங்கள் பலத்தை நிரூபித்து புதிய எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப தவெக முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications
