சிக்கிய டைரி + ஆவணங்கள்.. அமைச்சர் பொன்முடி வீட்டில் நின்ற காரில் இருந்து கைப்பற்றிய அமலாக்கத்துறை!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர் அங்கு நின்ற பொன்முடியின் காரில் சல்லடை போட்டு தேடினர். அதில் இருந்து டைரியை கைப்பற்றிய அதிகாரிகள், அமைச்சர் பொன்முடியின் உதவியாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினரின் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பொன்முடி வீட்டில் ரெய்டு: உயர் கல்வித்துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியிலுள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதமசிகாமணி வீட்டிலும், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பொன்முடி வீட்டில் நின்ற கார்: சட்ட விரோத வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 2008ஆம் ஆண்டு இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் முறையான உரிமம் பெறாமல் முதலீடு செய்ததாக கூறப்படும் புகாரில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், எந்த அடிப்படையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது என அமலாக்கத் துறை தரப்பில் இன்னும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் காரில் சோதனை நடத்தியுள்ளனர். அமைச்சர் பொன்முடியின் உதவியாளரையே காரை திறக்கச் சொல்லி சோதனை நடத்தினர்.

சிக்கிய டைரி: அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த காரில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதில் அதில் சில ஆவணங்கள் மற்றும் டைரியை அமலாக்கத்துறையினர் எடுத்துள்ளனர். காரில் இருந்து எடுத்த டைரியை புரட்டிப் பார்த்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் பொன்முடியின் உதவியாளரிடம் விசாரித்துள்ளனர். மேலும் காரின் பின்புறம், சீட்டுக்கு அடியில் என்று அதிகாரிகள் சல்லடை போட்டு தேடினர்.
மேலும், காரில் இருந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அதனை ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காரில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications