2016இல் என்ன சொன்னீங்க.. இப்போ டாஸ்மாக் நிறுவனத்தில் ED சோதனை.. முதல்வரை சீண்டிய அண்ணாமலை
சென்னை: 2016-ல் தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு தான் இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்றும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவானவர்கள் வீடுகள் மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தினர்.

செந்தி பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத் துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் ஈடி ரெய்டு நடந்தது.
சென்னை எழும்பூரில் தாளமுத்த நடராசன் மாளிகையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இந்த ஈடி சோதனை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஈடி சோதனை நடந்தியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2016-ல் தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, முதல்வர் ஸ்டாலின்.

ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு!" இவ்வாறு அண்ணாமலை ட்வீட் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட் பதிவில் முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட் பதிவினையும், தற்போது டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்தியையும் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications