ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு! சிக்கியது என்னென்ன? அமலாக்கத்துறை அறிக்கை
சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன்கள், மகள் வீடுகளில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் அவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் மூத்த முன்னோடி ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார். இவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது.

சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சரின் வீடு, அவரது மகன்கள், மகள் இந்திராணியின் வீடுகளில் காலை 6.30 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டிற்கு மேல் மாடியில் இரு அறைகள் யாரும் பயன்படுத்தப்படாமல் இருந்தன. இந்த அறையின் சாவியை அங்கிருந்த பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை கேட்டது. அதற்கு அவர்கள் இந்த அறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் சாவியும் இல்லை என்றார்களாம்.
உடனே அமைச்சர் பெரியசாமிக்கு போன் போட்டு அதிகாரிகள் சாவி கேட்டனர். அதற்கு அவரும் அதையே சொன்னாராம். உடனே அதிகாரிகள், பூட்டை உடைக்கலாமா என கேட்டனராம். அதற்கு பெரியசாமியும் "தாராளமாக" என பச்சைக் கொடி காட்டிவிட்டாராம்.
இவ்வாறு எல்லா இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதாவது கடந்த 2006-2010 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவர் பெரியசாமி. அவர் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகாக ரூ 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பெரியசாமி, அவரது மனைவி சுசிலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில் அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக பணபரிமாற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பெரியசாமியிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
தற்போது பெரியசாமி அமைச்சராக உள்ளார். அவரது மகன் செந்தில்குமார், பழனி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இளையமகன் பிரபு, திண்டுக்கல்லில் நூற்பாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியசாமி, அவரது மகள் இந்திராணி, மகன்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இவர்களது இருளப்பா மில்ஸ் என்ற நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டிஜிட்டல் ஆவணங்களும் சிக்கியுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications