எதிர்க்கட்சிகள் பலம்.. ஸ்டாலின் கிளம்பும் நேரத்தில் அமைச்சரை குறிவைத்து ரெய்டு.. பாஜக பிளான் இதானா?
சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் ரெய்டில் ஈடுபட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூர் செல்ல உள்ள நிலையில் நடந்து வரும் இந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, விழுப்புரம் உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அடுத்த சில மணி நேரங்களில் விமானம் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டு செல்கிறார். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் ஸ்டாலின் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் அதிகாரமிக்க அமைப்பான அமலாக்கத்துறை ஸ்டாலினின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரைக் குறிவைத்து ரெய்டை தொடங்கியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் பாஜக ஒவ்வொரு மாநிலமாக ரெய்டு அஸ்திரங்களை ஏவி வருவதாக ஆளும் பாஜக அரசு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் அமைச்சர் பொன்முடி மீதான ரெய்டு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஸ்டாலின் ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த ரெய்டு திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், 3வது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாது என நன்கு உணர்ந்துள்ள பாஜக, எதிர்க்கட்சிகள் பலம் பெற்று விடக்கூடாது என எதிர்க்கட்சிகளை குறிவைத்து பலவீனப்படுத்த முயற்சிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டையடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அன்று நள்ளிரவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவில் ஐகோர்ட் அவருக்கு எதிராக தீர்ப்பளித்த நிலையில், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் அடுத்த ஒரு மாதத்தில் இன்னொரு திமுக அமைச்சரும் குறிவைக்கப்பட்டுள்ளது பரபரப்பை எகிற வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications