குழிதோண்டி புதைக்க முயற்சி.. பொதுச்செயலாளர் ஆக முடியாது.. எடப்பாடி பழனிச்சாமியை சாடும் புகழேந்தி
சென்னை: அதிமுகவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஒரு போதும் பொது செயலாளர் ஆக முடியாது என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை உச்சக்கட்ட மோதலை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தமிழகம் முழுவதும் வலம் வந்து கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தனது பங்குக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இருவரும் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பேட்டியளித்து வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைவதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. அதனை தனது பேட்டியில் அவ்வப்போது பேசி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை. அதிமுகவை முடக்க வேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள் என்றார். ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் இணைய 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

புகழேந்தி பேட்டி
இதனிடையே சென்னையில் ராயப்பேட்டையில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் உட்பட எல்லோரும் விரும்பினார்கள் ", கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காத்துக்கொள்ளவே நூறு சதவீதம் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

குழி தோண்டி புதைக்க முயற்சி
எடப்பாடி பழனிசாமியின் முடிவு குறித்து ஓபிஎஸ் வருத்தப்பட்டார். அதிமுகவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி இந்த முடிவு எடுத்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓ.பி.எஸ் நிச்சயம் பங்கேற்பார், தீயசக்தி எடப்பாடி பழனிசாமி அருகில் உட்கார வேண்டிய நிலைமை ஏற்பட்டால் உட்கார்ந்து தான் ஆக வேண்டும்.

ஓபிஎஸ்க்கு மட்டுமே தகுதி
தேவர் ஜெயந்தி அன்று தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிய ஓ.பி.எஸ்க்கு தான் தகுதி உண்டு, எடப்பாடி பழனிசாமிக்கும் தேவருக்கும் என்ன தொடர்பு உள்ளது? சாதி என்ற போர்வையில் ஆர்.பி.உதயக்குமார் திண்டுக்கல் சீனிவாசன் பேசி வருகின்றனர்.

கட்சி அலுவலகம் செல்வோம்
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சாதி இல்லாத கட்சியாக அதிமுகவை வழிநடத்தினர். எடப்பாடி பழனிசாமி ஒரு போதும் பொது செயலாளர் ஆக முடியாது. காலம் வரும் போது நிச்சயம் கட்சி தலைமை அலுவலகத்துக்கு செல்வோம் என்றும் புகழேந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications