தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டவர் இபிஎஸ்.. எந்த பதவிக்கும் இனி வரமுடியாது.. ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியாரின் தம்பி கிருஷ்ணசாமியின் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், மனிதனுக்கு சுதந்திரம் வேண்டும், எழுத்துரிமை வேண்டும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாழும் உரிமை வேண்டும் என்று பேசியவர்.
பெண்களுக்கு சம உரிமை வேண்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று வலியுறுத்தியவர் பெரியார். இதற்கு நேரிதிராக ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் கருத்துகளை போன்ற கருத்துகளை பேசி வருபவரும் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்று தெரிவித்தார்.

இபிஎஸ் பற்றி கருத்து
இதனைத்தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இன்று எப்படியோ காலில் விழுந்து பதவியை பெற்றுவிட்டதால், இன்று தனக்குத்தானே அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று முடிசூட்டிக் கொண்டு பேசி வருகிறார்.

இனி பதவிக்கு வர முடியாது
தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறுவயதில் இருந்தே அரசியல் பணியாற்றி வருகிறார். அவரைப் பற்றி பேச இபிஎஸ்-க்கு தகுதியில்லை. இனி எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமியால் எந்த பதவிக்கும் வர முடியாது என்று தெரிவித்தார்.

திமுக கொள்கைகள்
அதேபோல் தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். திமுகவின் கொள்கைகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்புடைய கொள்கைகள் தான் என்று தெரிவித்தார்.

ராகுல் நடைபயணம்
தொடர்ந்து ராகுல் காந்தி நடைபயணம் குறித்து கூறுகையில், ஜி.கே.வாசன் விமர்சனத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. ஏனென்றால் அவரின் நிழலே அவர் பின்னால் வருவதில்லை. ராகுல் காந்தியின் நடைபயணம் 10வது நாளாக கேரளாவில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று, ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்த நடைபயணம் முடியும் போது, இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications