ஸ்டாலினை ஓபிஎஸ் பாராட்டினால்.. "தப்பான புள்ளிவிவரம்".. எடப்பாடி பழனிசாமி குறை சொல்கிறாரே!
முதல்வர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிஉள்ளார்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தொற்று காரணமாக நிறைய பேர் இறந்து வருகிறார்கள்.. ஆனால், இறப்போர் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுகிறது என்று முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, இன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.
Recommended Video
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முன்னாள் முதலமைச்சரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
"சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் மூச்சுத்திணறல் பெற்றவர்களுக்கான ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி என ஊரகப் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. அவசர சிகிச்சைக்கான படுக்கை வசதியும் நிரம்பி விட்டன.

ஆக்சிஜன்
1153 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தற்போது நிரம்பியுள்ளது. புதிதாக பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை கிடைக்காத நிலையே உள்ளது. அரசு விரைவாக கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டும். சேலம் உருக்காலை வளாகத்தில் 500 படுக்கை வசதி ஆக்சிஜன் வசதியுடன் ஒரு வாரத்தில் உருவாக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் இதுவரை தொடங்கவில்லை. போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புள்ளிவிவரம்
சேலம் மாவட்டம் முழுவதும் கோவிட் சிகிச்சை மையத்தில் 3800 படுக்கைகள்தான் உள்ளது. ஆனால் 11 ஆயிரத்து 500 படுக்கைகள் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. தவறான புள்ளி விவரத்தை கூறுகிறார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக எத்தனை படுக்கைகள் உள்ளன என்பதை தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளின் படுக்கை வசதி விவரங்களை நாள்தோறும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா நோயாளிகள் அங்கு சென்று சிகிச்சை பெற முடியும்.

சடலங்கள்
தற்போது இறப்பை குறைத்து காட்டுகிறார்கள். எல்லா மயானங்களிலும் சடலங்கள் காத்து கிடக்கின்றன. இதுகுறித்து தகவல்கள் ஊடகங்களில் முழுமையாக வெளியாக வில்லை. கொரோனா இறப்பை குறைத்து காட்டும்போது, மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்காது. அந்த சடலங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி நிகழ்வுகள் மேற்கொள்ளும்போது, அங்கு எண்ணற்றோர் கலந்து கொள்வதால் தொற்று பாதிப்பு அதிகமாகிறது.

படுக்கை வசதி
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், பல மணி நேரம் மயானங்களில் காத்து கிடக்க வேண்டியிருக்கிறது. மயானங்களில் தேவையான பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், படுக்கை வசதிக்காக ஆம்புலன்ஸிஸ் காத்திருக்கும் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கும் உரிய சோதனை மூலம் கொரோனா இருக்கிறதா என கண்டறிந்த உரிய கவச உடைகளைக் கொண்டு அடக்கம் செய்ய வேண்டும்.

சோதனை
இன்றைக்கு கிராமங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தளர்வில்லா ஊரடங்கிற்காக, கடந்த சனிக்கிழமை மதியம் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை விதிகள் தளர்த்தப்பட்டதால் 6 லட்சம் பேர் வரை நகரங்களில் இருந்து கிராமத்திற்கு வந்து விட்டனர். அவர்களுக்கு எந்தவித சோதனையும் நடத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, கிராமத்தில் புதிதாக யார் வந்தாலும் சோதனை நடத்திய பிறகே அனுமதித்தோம். இதனால்தான் அப்போது கட்டுக்குள் இருந்தது.

சுகாதாரத்துறை
இந்தியாவிலேயே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும். அதிக அளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் அதிமுக அரசு பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி இருக்கிறார். கடந்த ஜுன் மாதம் உச்சபட்சமாக 6900 பேர் பாதிக்கப்பட்டார்கள். நாங்கள் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையால், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி 487 பேர்தான் பாதிக்கப்பட்டனர்.

ஆலோசனை
அன்றையதினம் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் எந்த அதிகாரியும் அழைத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் பரவல் அதிகரித்ததால் தலைமைச் செயலாளரை அழைத்துப் பேசும்போது, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியும் கூட அதிகாரிகள் மட்டுமே ஆலோசனை நடத்த மட்டுமே அனுமதி கிடைத்தது. அப்போதும் முயற்சி எடுத்துக் கொண்டே இருந்தேன். சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னது உண்மைக்கு புறம்பான செய்தி.

அதிமுக
இதேபோன்று, முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அலையில் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று கூறியிருக்கிறார். அது தவறு, வல்லரசு நாடுகளில் கூட அதனை கட்டுப்படுத்தவில்லை. அதிமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததால் தான் 500-க்கு கீழ் தொற்று பாதிப்பு குறைந்தது. கொரோனா குறித்து எதுவும் தெரியாத நிலையில் உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை அளித்த வழிகாட்டுதலை பின்பற்றி குணமடையச் செய்தோம்.

சுகாதாரம்
கடந்த ஆண்டு தடுப்பூசி இல்லாத காலகட்டத்தில் தொற்றுப்பரவலை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.
ரெம்டேசிவர், முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தும் போதிய அளவில் கையிருப்பில் வைத்திருந்தோம். தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளரை கேட்டால் அவர் தெளிவுபடுத்துவார்.

குழப்பம்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தடுப்பூசி குறித்து சந்தேகம் தெரிவித்த ஸ்டாலின், தற்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இப்படி கருத்துக்களை கூறும்போது மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு விட்டது. அப்பவே அவர் தெளிவாக பேசியிருந்தால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பார்கள்.

செயல்பாடு
கொரோனா விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் பணி எல்லா விவரங்களையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதே. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சரின் கூற்றிற்கு இணங்க, எல்லா இடங்களில் அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகிறார்கள்.அங்கங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

கருத்து
இது சோதனையான நேரம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு மறந்து செயல்பட வேண்டும். நூறு நாட்களுக்கு பின்னரே கருத்து சொல்ல வேண்டும் என்று இருந்தேன். எங்களுடைய அரசை குறை சொன்னதால்தான், நாங்கள் கருத்து சொல்ல வேண்டி வந்தது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications