கோட்டைக்குள் ஏன் திடீர் "ஓட்டை".. தெரிஞ்சே டம்மியாக ஆட்களை போடுவது ஏன்.. டவுட் கிளப்பும் 2 தொகுதிகள்
எடப்பாடி, சேப்பாக்கம், தொகுதிகளில் பலம் பொருந்திய வேட்பாளர்கள் இல்லை
சென்னை: அதிமுக, திமுகவின் 2 முக்கிய தொகுதிகள் மிகவும் சந்தேகத்தை கிளப்பி விட்டு கொண்டே இருக்கின்றன.. இருக்கின்ற 234 தொகுதிகளில் இந்த 2 தொகுதிகள்தான் அதிக எதிர்பார்ப்பையும் எகிற விட்டு வருகின்றன.
இந்த முறை, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது... இந்த 23 தொகுதிகளிலும் பாமகவை எதிர்த்து பல வலுவான நபர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இதில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மட்டும் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி இங்கு களம் இறங்கி உள்ளார்.. இவரை எதிர்த்து பாமக சார்பில் ஏஎஸ்ஏ கஸ்ஸாலி போட்டியிடுகிறார். அதனால், இந்த தொகுதியில் பாமகவுக்கு கடுமையான போட்டி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அதிர்ச்சி
இந்த வேட்பாளர் லிஸ்ட் வெளியானபோதே பலருக்கு இது அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியது.. அதிமுக கூட்டணி எதற்காக இந்த தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியது? என்ற விடை இதுவரை கிடைக்கவில்லை.. அதிமுக நினைத்திருந்தால், நேரடியாகவே போட்டியிட்டிருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் பாஜகவுக்கு ஒதுக்கியிருந்தால் நிச்சயம் குஷ்பு அங்கு உதயநிதிக்கு டஃப் தந்திருப்பார்.

குஷ்பு
எளிதாக வெற்றி பெறுவதை விட்டுவிட்டு அல்லது திமுகவுக்கு நெருக்கடி தரும் வாய்ப்பையும் விட்டுவிட்டு எதற்காக பாமகவுக்கு ஒதுக்க வேண்டும்? என்ற சந்தேகமும் எழுகிறது. பாமகவை பொறுத்தவரை வடமாவட்டங்களில் வலுவில் உள்ளது என்பதில் மாற்றம் இல்லை.. சென்னையில் கூட பாமகவுக்கு ஆதரவான தொகுதிகள் மதுரவாயல் உட்பட பல இருக்கின்றன.. எனினும் சேப்பாக்கத்துக்கும் பாமகவுக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் எதற்காக இப்படி அதிமுக முடிவெடுத்தது என்பதும் குழப்பமாகவே இருக்கிறது.

பாமக
சேப்பாக்கத்தை பொறுத்தவரை பெரும்பாலும் பிராமண சமுதாயம், மற்றும் இஸ்லாமியர்கள்தான் அதிகம்.. இவர்கள் தான் அந்த தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடியவர்கள்.. அதாவது வன்னியர்கள் ஓட்டுக்கள் என்பதே அந்த பகுதியில் குறைவுதான்.. இதுபோக கூட்டணியில் பாஜக உள்ளதால், நிச்சயம் பாமகவுக்கு கணிசமான வாக்குகள் விழுமா என்பதும் கேள்விக்குறிதான்.

இஸ்லாமியர்
அதேசமயம், இஸ்லாமியர்கள் ஆதரவு என்பது திமுகவுக்கு எப்போதுமே, ஓரளவு இருந்து வருகிறது.. மேலும் இந்த சேப்பாக்கம் தொகுதியானது, அந்த கட்சிக்கு ஆதரவான தொகுதி என்ற ரீதியில் உதயநிதிக்கு வெற்றிகள் கனிய வாய்ப்புள்ளது. அதனால் எதற்காக அதிமுக கூட்டணி இப்படி ஒரு முடிவை எடுத்தது என்று விளங்கவில்லை.

திமுக
சேப்பாக்கத்தை போலவே இன்னொரு தொகுதியும் இதேபோல சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.. அது முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதி ஆகும்.. சேலம் தொகுதியை பொறுத்தவரை திமுகவுக்கு நிறைய செல்வாக்கு இருக்கிறது.. நிறைய பலம் பொருந்திய மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள்.. அவர்களில் யாருக்கும் சீட் தராமல், புதுமுகத்தை அதுவும் ஒரு இளைஞரை களம் இறக்க வேண்டிய அவசியமும் புரியவில்லை.

இளைஞர்
முதல்வரை எதிர்க்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு வலிமை பொருந்திய வேட்பாளர் அவசியம் அல்லவா? இளைஞர்களுக்கு திமுக வாய்ப்பு தருகிறது என்று இதை பாசிட்டிவ்வாகவே எடுத்து கொண்டாலும், முதல்வரின் தொகுதியில் இதை செய்ய வேண்டுமா? எடப்பாடியாரை எதிர்த்து குறைந்தபட்சம் சீனியர் வேட்பாளர் யாரையாவது நிறுத்தியிருக்கலாமே? என்றுதான் கேட்க தோன்றுகிறது.

புதிர்
இந்த முறை வேட்பாளர் லிஸ்ட்டை திமுகவும் சரி, அதிமுகவும் சரி, பார்த்து பார்த்துதான், ஆழமாக, தீர்க்கமாக யோசித்து தான் முடிவு எடுத்தது.. இவ்வளவு இருந்தும், எடப்பாடி தொகுதி விஷயத்தில் திமுகவும் சரி, சேப்பாக்கம் தொகுதி விஷயத்தில் அதிமுகவும் சரி, ஏன் கோட்டை கோட்டை விட்டன? எதற்காக வலிமை பொருந்தியவர்களுடன் பலம் குறைந்தவர்களை மோதவிடுகிறது என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது..!












Click it and Unblock the Notifications