ரூ.1.10 கோடி நஷ்டஈடு கோரிய இபிஎஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக அறப்போர் இயக்கத்திடம் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடுகோரிய எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். இவர் அமைச்சராகவும், முதல்வராக இருந்தபோதும் பொதுப்பணித்துறையையும் நிர்வகித்து வந்தார்.
கடந்த 2016 முதல் 21ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் எழுந்தது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார்
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

ரூ.1.10 கோடி கேட்டு வழக்கு
இது தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கத்துக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்ய அறப்போர் இயக்கம் கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ‛‛எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது. குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவணம் டெண்டரில் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக டெண்டரில் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் வழக்கு தொடரவில்லை. சொந்த புகழ் மற்றும் மலிவான விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது'' என வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது. உரிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பவில்லை என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications