எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு போனதாம்! ஆனாலும் ஆப்சென்ட்! சிவசங்கருக்கு என்னாச்சு?
சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு நேற்றைய தினம் 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வுக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருமே பங்கேற்கவில்லை.
தமிழக அமைச்சரவையில் நேற்றைய தினம் பெரிய அளவில் மாற்றங்களை செய்துள்ளார். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகிய 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அது போல் செந்தில் பாலாஜி, கோவி செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழா நேற்றைய தினம் ஆளுநர் மாளிகையில் நடந்தது. இந்த விழாவில் 34 அமைச்சர்களில் 32 அமைச்சர்கள் (புதியவர்களுடன் சேர்த்து) கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் பதவிப்பிரமாணத்தையும் ரகசிய காப்பையும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். இந்த நிலையில் இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகா, மகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அது போல் கூட்டணி கட்சியினர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், ஜவாஹிருல்லா, வைகோ, மநீம அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகளும் ஐபிஎஸ் அதிகாரிகளும், மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், சிவசங்கரும் கலந்து கொள்ளவில்லை.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களை பார்க்க சென்றிருந்தார். இந்த பதவியேற்பு விழாவுக்கு மதுரையிலிருந்து மதியம் விமானத்தில் சென்னை வருவதாக இருந்தது. ஆனால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரால் வர முடியவில்லை.
அது போல் அமைச்சர் சிவசங்கர் லண்டனில் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இவர் கடந்த 26ஆம் தேதியே லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டார். அதை முதல்வரிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார். இந்த நிலையில் இந்த விழாவுக்கு கனிமொழி வரவில்லை. அது ஏன் என தெரியவில்லை.
எல்லாவற்றுக்கு மேல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருமே கலந்து கொள்ளவில்லை. உதயநிதியை துணை முதல்வராக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் செந்தில் பாலாஜியை தியாகி என முதல்வர் ஸ்டாலின் அழைத்ததற்கும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications