மொத்த பார்முலாவையும் சுக்குநூறாக நொறுக்கிய எடப்பாடியார்.. திமுகவையும் விடல.. மிரள வைக்கும் பேச்சு
சென்னை: "ஓசி பிரியாணி சாப்பிடவேதான் திமுகவினர் குண்டு குண்டாக இருக்கிறார்கள்" என்று முதல்வர் பேசிய பிரச்சார பேச்சினை கண்டு, எதிர்கட்சிகள் மிரண்டு போயுள்ளனர்... இந்த பேச்சு மட்டுமில்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மொத்த பிரச்சார அணுகுமுறையே ஆச்சரியத்தை தந்து வருகிறது,
எம்ஜிஆர், கலைஞர் இருந்தபோது பிரச்சாரங்கள் வேறு மாதிரியாக இருந்தன.. மக்களின் பிரச்சனைகளை இயல்பாக பேசி வாக்குகளை சேகரித்தனர்..
தொகுதிக்குள் சகஜமாக களம் இறங்கி, தெரு தெருவாக ஓட்டுக்களை கேட்டு, இயல்பாகவும், கேஷூவலாகவும் இந்த தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

பிரசார உத்தி
ஆனால், ஜெயலலிதா வந்தபிறகுதான் இந்த பிரச்சார பாணியே மாறியது.. மேடைகளில் சிங்கம்போல கர்ஜிப்பார் ஜெயலலிதா.. புள்ளி விவர தரவுகளுடன் புட்டு புட்டாக வைத்து எதிர்கட்சிகளை திணறடிப்பார்.. ஆனால், நாளுக்கு நாள் இவரது உடல்நிலையில் பிரச்சனை வரவும்தான், கேரவன் பிரச்சார வேன் ரெடியானது.. அந்த வேனில் முன்சீட்டில் உட்கரந்து கொண்டே தமிழகம் முழுவதும் வலம் வந்தார் ஜெயலலிதா.

களத்தில் கலக்கல்
இதைதான் எடப்பாடியார் உடைத்துள்ளார்.. ஜெயலலிதா வீதிகளில் இறங்காமல் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, இதை மாற்றி உள்ளார்.. சேர், சகதி உள்ள விவசாய நிலங்களில் எல்லாம் இறங்கி பிரச்சாரம் செய்கிறார்.. தலைக்கு குடை கூட இல்லாமல், வெட்டவெளியில் வேனில் நின்று பேசுகிறார்.. ஏற்கனவே இவர் எளிமையான முதல்வர் என்று பெயர் எடுத்தவர் என்பதால், பிரச்சாரத்தில் இவருக்கு தனி ஆடம்பரம் எதுவும் தேவைப்படுவதில்லை.

துண்டுக் காகிதம் இல்லாமல் பேச்சு
அதேபோல, பிரச்சாரம் செய்யும்போதுகூட, எதையும் எழுதி வைத்து கொள்வதில்லை.. இயல்பாகவே பேசுகிறார்.. முன்பு மாதிரி இல்லை, புள்ளிவிவர தகவலையும் பார்க்காமலேயே சொல்கிறார்.. திமுகவில் ஒருவரை விட்டு வைப்பதில்லை.. ஜெயலலிதா இருந்தபோது, அவரது ஒரே டார்கெட் கலைஞர் மட்டுமே.. "திரு.கருணாநிதி அவர்களை நான் கேட்கிறேன், " என்று ஆரம்பித்து முழுக்க முழுக்க கலைஞரை மட்டுமே குறி வைத்து பேசுவார்.. கூட்டணி தலைவர்களைகூட கண்டுகொள்ள மாட்டார்.

யாரையும் விடுவதில்லை
ஆனால், எடப்பாடியார் அப்படியில்லை.. முக ஸ்டாலின் பற்றி பேசினாலும், உதயநிதியை விட்டு வைப்பதில்லை.. உதயநிதி பற்றி பேசினாலும், தினகரனை விட்டு வைப்பதில்லை.. ஒரு கட்சி விடாமல் லிஸ்ட் போட்டு பேசி வருகிறார்.. இன்றைக்கு கூட, "ஓசி பிரியாணி சாப்பிடுவதால்தான், திமுகவினர் குண்டு குண்டாக இருக்கிறார்கள்" என்று ஜோக் அடித்து பேசி உள்ளார்.. ஒரு தலைவர், ஒரு முதல்வர், இப்படித்தான் பேச வேண்டும் என்ற பார்முலாவையெல்லாம் சுக்குநூறாக நொறுக்கிட்டு, முன்னேறி கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி..!












Click it and Unblock the Notifications