''தண்ணீர் இல்லாமல் கன்னியாகுமரி மாவட்டம் காய்கிறது! என்ன செய்கிறது அரசு?'' எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை: செழிப்பான பகுதியாக திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டம், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக விவசாயத்திற்கு தண்ணீரின்றி, மக்களுக்கு குடிதண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
கன்னியாகுமரி மாவட்டம் என்பது கேரளாவை ஒட்டி உள்ளதால், காலாகாலத்தில் மழை பெய்து அணைகள் நிரம்புவது வாடிக்கை. ஒரு காலத்தில் நீர் நிரம்பி காணப்படும் செழிப்பான பகுதியாகத் திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டம், இன்று விடியா திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும், பொதுமக்களுக்குத் தேவையான குடிதண்ணீர் கிடைக்காமலும் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணைகள் உள்ளன. அதிமுக் ஆட்சிக் காலத்தில், இந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களும் தூர் வாரப்பட்டு, உடைப்புகள் சரி செய்யப்பட்ட பின்னர்தான் தண்ணீர் திறந்துவிடப்படும்.
ஆனால், தற்போதுள்ள விடியா திமுக ஆட்சியில் இந்தக் கால்வாய்களில் எந்தவித தூர் வாரும் பணிகளும், உடைப்புகளை சரிசெய்யும் பணிகளும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கால்வாய்கள் மற்றும் குளங்கள் தூர் வாரப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது.
விடியா திமுக ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தவிதமான தூர் வாரும் பணிகளும் நடைபெறாததால், கடந்த ஆண்டு 14,250 ஏக்கரில் மட்டும் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு இப்பரப்பு மேலும் குறைந்து, சுமார் 10,500 ஏக்கரில் மட்டும் பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3,750 ஏக்கர் பாசனப் பரப்பு குறைந்துள்ளது.
நாகர்கோவில் மாநகருக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில், பொதுமக்களுக்கு குறைபாடின்றி குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. கோடை காலத்திலும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகின்ற அவல நிலை இருப்பதால், மக்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டேன். மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க, புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு, அம்ருத் திட்டத்தின் மூலம் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, எங்கள் ஆட்சிக் காலத்தின் இறுதியில் பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், விடியா திமுக அரசு பொறுப்பேற்று 27 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் பணிகள் நிறைவு பெறவில்லை.

அம்மாவின் அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் இந்த விடியா திமுக அரசு, இந்தத் திட்டத்திற்கும் மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் நாகர்கோவில் மாநகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாஞ்சில் நாடு என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், இன்றைக்கு நீரின்றி பயிர்கள் எல்லாம் கருகி, பாடுபட்டு வேளாண் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் கண்கலங்கும் துயரத்தை விடியா திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.
எனவே, உடனடியாக மாவட்டம் முழுவதும் அனைத்து கால்வாய்கள் மற்றும் குளங்களையும் தூர் வாரி குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கி, விவசாயிகளின் நீர் ஆதாரத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் பெருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications