அதிமுகவினர் வீடுகளில் 3 நாட்கள் தேசியக் கொடி பறக்கட்டும்! எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!
சென்னை: ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அதிமுகவினர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி "சுதந்திர தின அமுதப் பெருவிழா" என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதையும் அதிமுகவினருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிக்காரர்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

சுதந்திர தினம்
நமது இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் வருகின்ற 15.08.2022 அன்று கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக "சுதந்திர தின அமுதப் பெருவிழா" என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

வீடுகளில் தேசியக் கொடி
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வரலாற்றின் சில குறிப்புகளைப் பகிர்ந்துகொண்ட பிரதமர் , இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்த நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.

பிரதமர் அறிக்கை
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் "சுதந்திர தின அமுதப் பெருவிழா" என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், தங்களது வீடுகளில் தேசியக் கொடி - என்ற இயக்கத்தின் மூலம் மேலும் தேசப்பற்றை வலுப்படுத்துவோம் என்றும், ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15-ஆம் நாள் வரை, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள் என்றும், இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை
இவ்வாறு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் பறக்கவிடப்படும் தேசியக் கொடியை, இரவில் இறக்குவதற்கு தேவையில்லை என்றும், மூன்று நாட்களும் பறந்தவாறே இருக்கட்டும் என்றும், அதற்கேற்றவாறு விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். தேசியக் கொடி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது "கொடி காத்த குமரன்" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திருப்பூர் குமரன் தான்.
Recommended Video

நாட்டுப் பற்று
அந்நியர் ஆட்சியில், நமது தேசியக் கொடியை காப்பதற்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த கொடி காத்த குமரன் முதல் அனைத்து விடுதலைப் போராட்டத் தியாகிகளையும் தீரர்களையும் 75-ஆவது சுதந்திர தின நன்னாளில் நினைவு கூர்வோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications