இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு
சென்னை: அதிமுகவுக்கு இது சோதனை காலம். தேர்தலில் தோல்வியடைந்தாலும் திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகும் முயற்சி செய்தார். தவெக அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை. அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் வலுவான வேட்பாளர்கள் களமிறக்க எடப்பாடி திட்டமிட்டு வருகிறாராம்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தலுக்கு பிறகு அதிமுக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கினார்கள். வேலுமணி உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியிடம் சரண்டரானாலும் பல முன்னாள் அமைச்சர்கள் அப்செட்டில் தான் இருக்கிறார்கள்.

பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளின் எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி தனி கட்சி தொடங்குவதற்கான இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். அண்ணாமலை கட்சியிலும் பல அதிமுக நிர்வாகிகள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
எடப்பாடிக்கு நெருக்கடி
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி மீது 10 தோல்வி பழனிசாமி என்கிற விமர்சனத்தை திமுக மற்றும் சொந்தக் கட்சியினரே விமர்சித்து வருகிறார்கள். இதனால் தோல்வியில் இருந்து வெளிவரவேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருக்கிறார்.
இதனால் தன்னுடைய வெற்றியை நிரூபித்து ஆளுமையை தக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இடைத்தேர்தலில் தன்னுடைய சொந்த பகுதியான கொங்கு
மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கொங்கு மண்டலத்தில் தாராபுரம், பெருந்துறை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களே தவெக சார்பில் அங்கு போட்டியிட வாய்ப்புள்ளது.
இடைத்தேர்தலுக்கு தயார்
அவர்களுக்கு கடுமையான போட்டி கொடுக்குமளவுக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருகிறார்களாம். மக்களிடமும், கட்சியிலும் நன்கு அறிமுகமான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதனுடன் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்கு தொகுதியிலும் பலமான வேட்பாளரை களமிறக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம்.
ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக நிர்வாகிகள் தயங்குகிறார்களாம். மதுராந்தகம் தொகுதியை ஏற்கனவே பாமக கேட்டது. இதேபோல அம்பாசமுத்திரம் தொகுதியை பாஜக கேட்டது. தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அதிமுகவே நேரடியாக களமிறங்கியது. இந்நிலையில் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை பாமகவுக்கும், அம்பாசமுத்திரம் தொகுதியை பாஜகவுக்கும் வழங்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications