சசிகலா காலில் விழுந்த ஒரே வாரத்தில்.. எடப்பாடி ஏமாந்துட்டாருங்க - ஆர்.எஸ்.பாரதி சொல்லும் காரணம்
சென்னை: சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு ஒரே வாரத்தில் மறந்தவர்கள், இந்த பிளவையும் மறந்து சேர்ந்துவிடுவார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இபிஎஸ் பொதுச்செயலாளர்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

திமுக மீது குற்றச்சாட்டு
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்று சாடிய அவர், அதிமுக தலைமையகத்தை கைப்பற்றியதை கண்டித்தார். ஆளும் திமுக அரசு ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து செயல்படுவதாகவும், சட்டம் ஒழுங்கை காக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "எம்ஜிஆர் மறைந்ததிலிருந்தே அக்கட்சியில் ஒவ்வொரு விபத்துகள் வரும். பின்னர் சேர்ந்துவிடுவார்கள். இந்த பிளவு கூட நிரந்தரமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துவிடுவார்கள்.

சசிகலாவை மறந்துவிட்டார்கள்
சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கியவர்கள். ஒருவாரத்திலேயே சசிகலாவையே மறந்தவர்கள், இதையும் மறக்கக்கூடும். ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் செல்கிறார். கல் வீசப்படுகிறது. உடனே 144 தடை உத்தரவு போடப்பட்டு காவல்துறை அங்கு குவிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே ஒரு சொத்து பிரச்சனை ஏற்படுகிறபோது ஆர்.டி.ஓ. அங்கு சென்று சீல் வைத்தார். எடப்பாடிக்கு இதில் நம்பிக்கை இல்லையா?

எடப்பாடி ஏமாந்துவிட்டார்
நீதிமன்றத்துக்கு சென்று வழக்கில் வெற்றிபெற்றதைபோல், இதற்கு எதிராகவும் வழக்கு தொடர வேண்டியதுதானே. இன்றுதான் சீல் வைத்துள்ளோம். நள்ளிரவுகூட நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும்போது அரசு செய்ய வேண்டியதை செய்திருக்கிறது. இன்று அவ்வழியாக பேரணி செல்ல அனுமதி கேட்டால் அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்காது. அவர் நடிக்கிறார். ஏமாந்துவிட்டு எங்கள் மீது பழிபோடுகிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications