"நாட் குட்".. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையால் பயந்துட்டீங்க! எல்லாம் பிளான்! எடப்பாடியிடம் சீறிய அப்பாவு
சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை கண்டு அஞ்சி விட்டீர்கள், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை கண்டு அஞ்சி விட்டீர்கள், அதனால்தான் அவையில் அமளி செய்கிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக அமளி ஏற்பட்டது. அவை தொடங்கியதும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அமளியில் ஈடுபட்டது. இவர்களுக்கு கேள்வி நேரத்திற்கு பின் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கேள்வி நேரத்திற்கு முன் பேசுவதற்கு அனுமதி வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தது.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, நான் நினைத்தது சரிதான். நீங்கள் எதோ குறிக்கோள் வைத்து இருக்கிறீர்கள். கலகம் செய்ய வேண்டும் என்று வந்து இருக்கிறீர்கள். எல்லாம் திட்டம் போட்டுவிட்டு வந்து இங்கே சத்தம் போடுகிறீர்கள். இது மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய இடம். இங்கே மக்கள் பிரச்னையை பேசாமல் நீங்கள் கலகம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
அவையின் மாண்பை இப்படி கெடுக்காதீர்கள். இட் இஸ் நாட் குட். நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் வெளியே போக வேண்டும் என்று விரும்பினால் வெளியே செல்லுங்கள். நான் நடவடிக்கை எடுப்பேன். இந்தி எதிர்ப்பு தீர்மானம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுவதைக் கண்டு எதிர்கட்சிகள் அஞ்சுகிறார்கள்.
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் உண்மை வெளியாகும் என்பதால் அமளி செய்கிறீர்களா? மத்திய அரசுக்கு ஆதரவாக, இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட திட்டமிட்டுள்ளீர்கள்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை கண்டு பயந்துவிட்டீர்கள். 1989ல் நடந்ததைபோல மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளீர்கள். இதற்காக ஏற்பாடு செய்து நீங்கள் வந்து இருக்கிறீர்கள். நீங்கள் அதை கையில் பிரிண்ட் செய்து வைத்து இருக்கிறீர்கள். இதோ உண்மை வெளிவந்துவிட்டது இல்லையா? ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை பார்த்து தானே அச்சப்படுகிறீர்கள். இந்தி தீர்மானம் வரும் போது இருக்க கூடாது. அதில் இருக்க கூடாது என்று அஞ்சி தானே செல்கிறீர்கள்.
இதை எல்லாம் கண்டு நீங்கள் பயந்து போய் வெளியேறுகிறீர்களா? என்று சபாநாயகர் அப்பாவு இன்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications