அதிமுகவுக்கு ஆள்பிடிப்பு! ராமதாஸை சீண்டும் எடப்பாடி பழனிசாமி? ரசிக்கும் திமுக!
சென்னை: பாமகவிலிருந்து முக்கியப் பிரமுகர்களை வளைக்கும் அசைன்மெண்டை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்திருப்பதால் ராமதாஸ் சீற்றம் அடைந்திருக்கிறாராம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை காட்டிலும் அதிமுகவை வடமாவட்டங்களில் வீழ்த்தி பலவீனப்படுத்துவதற்கு பக்காவாக ஸ்கெட்ச் போடப்பட உள்ளதாம்.
அதிமுகவுக்கும் பாமகவுக்கும் ஏற்பட்டுள்ள இந்த உரசலை வடமாவட்ட திமுகவினர் சைலண்டாக ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணி
ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக அதிமுகவும் பாமகவும் அரசியல் செய்து வந்த நிலையில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்தது அரசியல் களத்தையே அதகளப்படுத்தியது. இதற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் ஒரே கூட்டணி குடையின் கீழ் அதிமுகவும், பாமகவும் செயல்பட்டன. இந்தச் சூழலில் அண்மையில் கூட்டணி தர்மத்தை மீறி நடந்ததாக அதிமுக மீது குற்றஞ்சாட்டிய ராமதாஸ் இனி என் வழி தனி வழி என 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமகவை தனித்து களமிறக்கினார்.

கூட்டணி விவகாரம்
அதேபோல் இப்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் எனக் கூறிவிட்டார். இதனால் வடமாவட்டங்களில் அதிமுகவுக்கு கணிசமான பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி விவகாரத்தில் மறுபரிசீலனை செய்யச் சொல்லுமாறு பாமக மேல்மட்ட நிர்வாகிகள் சிலரிடம் சில நாட்களுக்கு முன் தூதும் விட்டிருக்கிறார். குறிப்பாக மாம்பழம் நகர் மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் இது தொடர்பாக அவரே பேசவும் செய்திருக்கிறார்.

முக்கியப் பிரமுகர்கள்
ஆனால் எல்லோரும் சொல்லி வைத்தாற்போல், தைலாபுரம் தோட்டத்தை நோக்கி கைகாட்டிவிட்டு தாங்கள் எதுவும் செய்யமுடியாது என ஒதுங்கிக் கொண்டார்களாம். இதையடுத்தே சற்றே அதிரடி அரசியலை கையில் எடுத்தாராம் எடப்பாடி பழனிசாமி. பாமகவிலிருந்து முக்கியப் பிரமுகர்களை அதிமுகவுக்கு அழைத்து வரும் முதல் அசைன்மெண்ட்டிலேயே, பாமக மாநில துணை செயலாளரும், சிவகங்கை மாவட்ட செயலாளருமான திருஞானத்தை மருது அழகுராஜ் மூலம் இந்தப் பக்கம் இழுத்திருக்கிறார்.

அனல் பறக்கும்
மேலும், சில முன்னாள் பாமக நிர்வாகிகளை இழுக்கவும் சேலம், தருமபுரி, மாவட்டங்களில் அதிமுக தரப்பில் காய் நகர்த்தப்படுகிறதாம். இது பாமக நிறுவனர் ராமதாஸை சீண்டும் வகையில் இருப்பதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவதற்கான வேகம் அதிகரிகப்பட்டுள்ளதாம். இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications