தகிக்கும் சூரியன்.. எடப்பாடி போட்ட ‘ஜில்லுனு ஒரு ஆர்டர்’.. தினமும் 2 முறை சென்று பார்வையிட வேண்டும்!
சென்னை : பொதுமக்களின் தாகம் தணிக்க நீர் மற்றும் மோர் பந்தல்களை அமைக்குமாறு அதிமுகவினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பகல் நேரத்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் வெளியே தலைகாட்டவே அஞ்சுகின்றனர்.
இந்நிலையில், வெயிலில் இருந்து பொதுமக்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், குடிநீர் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி ஆர்டர்
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களுக்கு தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டும் செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் துடிப்புடன் ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன்.

நீர் மோர் பந்தல்
தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாளுக்கு 2 முறை
பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை, கழக நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ரத்து
இதற்கிடையே, ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக செயற்குழு ரத்து செய்யப்பட்டுள்ளது. 7 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த மா.செக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதாலும், அதிமுக தொடர்பான வழக்கு காரணமாக சில வாரங்கள் கழித்து செயற்குழு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications