பிரதமராகும் எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் இப்படி செய்கிறாரோ.. எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
சென்னை: பிரதமராகும் எண்ணத்தில் 37 கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினாரோ என முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் கூறுகையில் அதிமுகதான் தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர் தோல்விகளை மறைக்க, சமூக நீதி கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் நுழைந்திருக்கிறார்.
அகில இந்திய அளவிலும் குறிப்பாக நம் தாய்த் திருநாடான தமிழகத்திலும் சமூகநீதிக்கு இப்போது என்ன பாதிப்பு வந்துள்ளது என்று யாருக்கும் புரியவில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சமூக நீதிக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டது என்றால் அதற்கு மூலக் காரணம் திமுகவாகத் தான் இருக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

ஸ்டாலின்
1999 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மத்திய அரசில் சுமார் 17 ஆண்டுகள் தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோருடன் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து தங்களது சொந்தங்களுக்கெல்லாம் முக்கியமான அமைச்சர் பதவிகள வாங்கி, ஊழலில் திளைத்த திமுக மற்றும் அப்போது அக்கட்சியின் செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் சமூக நீதிக்காக என்ன செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும்.

முல்லை பெரியாறு
திமுக - காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, நீட் நுழைவுத் தேர்வு பிரச்சினை, ஜல்லிக்கட்டு இடஒதுக்கீடுப பிரச்சினை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலன் என்று எதிலும் எதையும் செய்யாமல் மத்திய அரசில் அங்கம் வகித்தது. தமிழகத்திற்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரஸுக்கு உறுதுணையாக இருந்தது போன்ற பல்வேறு துரோகங்களை இழைத்த திமுக இன்று சமூகநீதி என்ற போர்வையில் கபட நாடகம் ஆடுகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் எம்ஜிஆர். 50 சதவீத இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்தி அதற்கு சட்ட பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தந்தவர் ஜெயலலிதா. 1991- 96 ஆம் கால கட்டத்தில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெறாத போதும் ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் பிவி நரசிம்மாராவிடம் வாதாடி போராடி 69 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்த்து சமூக நீதியைக் காத்தவர் ஜெயலலிதா.

பிரதமராகும் ஆசை
இதற்காகவே தற்போது ஏதோ சில காரணங்களுக்காக திமுக அணியில் உள்ள திக தலைவர் கி வீரமணி சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு கொடுத்தார். ஆனால் சமூக நீதிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுமைக்குமான சமூக நீதி கூட்டமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து 37 தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியதன் உள்நோக்கம் என்ன? இந்தியாவில் அடுத்த பொதுத் தேர்தல் 2024 இல் தான் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாகவே பல மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. எனவே ஸ்டாலினும் அதே எண்ணத்தில் சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற போர்வையில் கடிதம் எழுதியிருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. இந்த கூட்டமைப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலோ விளம்பரங்களிலோ கடிதத்திலோ எந்தெந்த விதத்தில் சமூக நீதி பறிக்கப்பட்டது, எந்தெந்த விதத்தில் தமிழக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லை என்றெல்லாம் விளக்காமல், தற்போதைய மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் கிடைத்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தான்தான் காரணம் என மார் தட்டுகிறார்.

பின்யோசனை
இதற்காக உயர்நீதிமன்றத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது அதிமுக மட்டுமே. நமக்கு இந்தப் பிரச்சினையில் நல்ல பெயர் வந்துவிடுமே என்ற எண்ணத்தில் பின்யோசனையுடன் திமுகவும் மற்றவர்களும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அதிமுகதான் இதே பிரச்சினைக்காக உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அதிமுகவுடன் ஒட்டிக் கொண்டு வந்தது திமுக. மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் தற்போதைய மத்திய பாஜக அரசு சட்டத்தை இயற்றியது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றியை அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவை மறக்கவில்லை
நாட்டு மக்களுக்கு நன்மை வரக் கூடிய ஒரு சட்டத்தை இயற்றியவர்களுக்கு நன்றி சொல்லக் கூட மனம் வராத ஸ்டாலின் ஏதோ தன்னால்தான் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது கண்டிக்கத்தக்கது. 1990 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடுகள் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை அளித்த போது அன்றைய காங்கிரஸ் அரசோடு கொஞ்சிக் குலாவி இருந்தது திமுக என்பதை யாரும் மறக்கவில்லை. மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற எந்த ஒரு துரும்பையும் திமுக கிள்ளிப்போடவில்லை என்பதையும் கூட மக்கள் மறக்கவில்லை. 1991 ஆம் ஆண்டு மறைந்த பிவி நரசிம்மராவ் பாரத பிரதமராக இருந்த போதுதான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்கள். அந்த காலக் கட்டத்தில்தான் ஜெயலலிதாவும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தினார்கள்.

கல்வி வேலைவாய்ப்பு
உச்ச நீதிமன்றமே பல்வேறு மாநிலங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு அளித்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளது. அதற்கு பின்னால் சுமார் 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது இந்த 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியாமல் மக்கள் குழம்பி போயுள்ளனர். தமிழகத்தின் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணமான திமுகவும் அதன் தலைமையும் சமூகநீதிக் கூட்டமைப்பு என்ற ஒன்றை ஏற்படுத்துவதும் அதில் சேர இந்தியாவில் உள்ள 37 கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருப்பதும் உள்நோக்கம் கொண்டதாகவே நாங்கள் கருதுகிறோம். ஏற்கெனவே நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆதரவு அளிக்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு இதுவரை எந்த ஒரு மாநில முதல்வராவது பதில் கடிதம் எழுதி இருக்கிறார்களா? அப்படி எழுதி இருந்தால் அந்தக் கடிதத்தை ஸ்டாலின் வெளியிட தயாரா?

இட ஒதுக்கீடு
இன்றைக்குக் கூட பல மாநிலக் கட்சித் தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் பொருள் புரியவில்லை என்று கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன. ஏனெனில் வடமாநிலங்கள் மற்றும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர ஆகியவற்றில் நீட் நுழைவுத் தேர்வாக இருந்தாலும் இட ஒதுக்கீடாக இருந்தாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இருந்தாலும் எந்த விதத்திலும் சமூக நீதி மீறப்படவில்லை என்ற எண்ணமே மேலோங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல் முதல்வர் ஸ்டாலின் 37 கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 9 மாத கால திமுக அரசின் தோல்வியை மறைக்க சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் காகிதப் பூ நாடகம் ஆடுவதை நிறுத்துவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் தமிழக மக்களின் நலனுக்காவும் முடிந்தால் எதையாவது செய்யும்படி ஸ்டாலினை வற்புறுத்துகிறேன் என எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications